பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி

[1]


னத்தின் வியத்தகு ஆற்றல்களுள் ஒன்று கற்பனை இல்லாததைப் படைப்பதையும் வானக்கோட்டைகளை எழுப்புவதையும் கற்பனையென்று சாதாரண மக்கள் கருதுகின்றனர். உண்மையில் நிலைபேறில்லாப் பொருள்களையுண்டாக்கும் மனத்தின் ஒருவகை யாற்றல் கற்பனையாகும். ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் இயற்கைச் சூழலினிடையே தன்னந் தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுது நம்முடைய மனம் தட்டுத் தடையின்றிப் பாவனை உலகங்களில் (Make believe Worlds) அலைகின்றது. வானத்திலுள்ள மேகங்களில் பிராணிகள் பறவைகள், கட்டடங்கள் முதலியவற்றின் வடிவங்களைக் காண்கின்றோம். சாதாரண நிகழ்ச்சி ஒரு சிறுகதையாகின்றது இவை யாவும் கற்பனையே.

சிந்தாமணியில் : சிந்தாமணியில் ஒரு நிகழ்ச்சி. அசனி வேகம் என்ற யானையின் செருக்கைச் சீவகன் அடக்கிய செய்தியைக் கட்டியங்காரன் அறிகின்றான். அதன் பிறகு சீவகன் அவனால் சிறைப்படுத்தப் பெறுகின்றான். பின்னர்ச் சுதஞ்சனன் என்னும் தேவன் துணையால் சிறையினின்றுத் தப்பி உய்கின்றான். இங்ஙணம் தப்பியவன் பதுமை, கேமசரி என்ற இருமகளிரை மணந்து அவர்களிடம் இன்பந்துய்த்து வழக்கம்போல் அவர்களையும் விட்டுப் பிரிகின்றான். பின்னர் மத்திம தேயத்துள்ள ஏமமாபுரத்தின் ஒரு பூஞ்சோலையை அடைகின்றான். அங்குள்ள ஒர் அழகிய பொய்கையைக் கண்டு அதன்


  1. * திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆண்டிதழில் வெளிவந்தது.