பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அறிவியல் தமிழ்

மண்ணுலகக் காட்சிஎல்லாம் மற்றிங் கிருந்தபடி

கண்ணுக் கெதிரிலே காணலாம்.”[1]

என்று வள்ளிக்குக் கூறுகின்றான். இந்த வரிகளைப் படிக்கும் நமக்கு வானொலியும் (Radio), தொலைக்காட்சியும் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியை உணர்த்துவதாகவும், மற்றொரு மூலிகை தொலைக் காட்சியைக் குறிப்பதாகவும் நாம் கருதலாம்.

சீவகன் வரலாறும் பாரதமும் குப்பன்-வள்ளி சந்திப்பும் வெறும் கதைகள்; கற்பனை ஓவியங்கள். எனினும், அவற்றைப் புனைந்த கவிஞர்கள் தொலைவிலுள்ள காட்சிகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே காண்பதற்குரிய கருவியமைப்பினைப்பற்றிக் ‘கனவு’ கண்டிருக்கின்றனர் என்றாவது நாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? இங்ஙணம் கவிஞர்களிடம் தோன்றிய கற்பனைதான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகள் மூலம் புதுப்புனைவுகளாக (inventions) வடிவெடுத்தது என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு பண்டிருந்து இன்றுகாறும் மனிதன் தொலைக்காட்சியைப் பற்றிக் கண்ட கனவே இன்று அறிவியல் ஆய்வுகளால் நனவாகி உள்ளது. இன்று உலகெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே கண்டு களிக்க முடிகின்றது.


  1. 5. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-வரி (45-49)