பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அறிவியல் தமிழ்


றிவியல்’ தமிழ் அண்மைக் காலத்தது. நாட்டுப்பற்று மிகுந்து அது விடுதலை இயக்கமாக மாறத் தொடங்கிய நாள் தொட்டு அதனுடைய இரட்டைப் பிறவிபோல் மொழிப்பற்றும் அதனுடன் தோன்றி ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. பல்வேறு வகையில் இதற்கு உரம் இட்டு நீர்வார்க்கப் பெற்று வருவதால் இத் துறை விரைவாக வளர்ந்து வருகின்றது. ஆயினும், எம்மருங்கும் கேட்கப்பெறும் ‘முழக்கத்திற்’ கேற்ப இத்துறையில் செயல் திறம் காணப்பெறவில்லை. இன்று வாய்ச்சொல் வீரர்கட்குத் குறைவு இல்லை. செயல்வீரர்களின் தொகை மிகுந்தால்தான் இத்துறையில் உருப்படியான பயனை எதிர்பார்க்கலாம். நாட்டுப்பற்று வளர்வதற்குத் தூண்டுகோல்போல் அமைந்த கவிஞனின் குரல் மொழிப் பற்றும் வளர்வதற்கும் ஓர் ஊன்றுகோல் போல் அமைந்தது. தமிழ்த்தாய் தன்மக்களை வேண்டுவது போல் அமைத்து மேனாட்டான் ஒருவன் கூறிய இழி சொல்லை அகற்றுமாறு குறையிரப்பதுபோல் அமைந்த கவிஞனின் குரல் இது :[1]

“இன்னொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
    ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு

    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!”

  1. * தில்விச் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலரில் (1971) வெளிவந்தது.