பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூல்முகம்


கண்டதுவேகொண்டு எல்லாரும் கூடி

கார்க்கடல் வண்ணனொடு என்திறத்துக்

கொண்டு அலர் துாற்றிற்று; அதுமுதலாக்

கொண்டஎன் காதல்உரைக்கில், தோழி!

மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்

நீள்விசும்பும் கழியப் பெரிதால்;

தெண்திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த

தென்திருப் பேரெயில் சேர்வன்சென்றே 3

-நம்மாழ்வார்

இந்தத் தொகுப்பில் காணும் கட்டுரைகள் 11-ம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் எழுதப் பெற்று வெவ்வேறு இதழ்களில்-மலர்களில் வெளிவந்தவை. இவற்றுள் கட்டுரை.7 நீங்கலாக பத்துக் கட்டுரைகள் என் மணிவிழா ஆண்டு வெளியீடாக என் அருமைச் செல்வர்கள் திரு எஸ். இராமலிங்கம் M.Sc., டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் M.D. என்போரால் 1976-இல் வெளியிடப் பெற்றன. இந்தப் பதிப்பில் 'தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி' என்ற கட்டுரை ஏழாவது கட்டுரையாகச் சேர்கின்றது. இக்கட்டுரைகள் யாவும் மேற்கல்வி கற்கும் இளைஞர்கட்குப் பல்சுவை விருந்தாக அமைத்து மேலும் கற்க வேண்டும் என்ற பெரு விருப்பைத் துண்டி விடும் என்பது என் திடமான நம்பிக்கை. 'கற்றனைத்து ஊறும் அறிவு' அன்றோ?

இந்த இரண்டாம் பதிப்பு (1981) என் 64-வது அகவை நிறைவு வெளியீடாக வரும் வரையிலும் என் பிராரப்த கருமம் கழியாது உள்ளது.என்னைக் கொண்டு கல்வி உலகில் ஒரு 'பெருந்தொண்டு' நிறைவேற்றக் கருதியுள்ளான் எம்பெருமான் என்பது என் அதிராத நம்பிக்கை. அதுவரையிலும் என் பிராரப்தம் கழியாது.

என்னைக் கொண்டு இத்தகைய கட்டுரைகள் எழுதுவித்தும் வெவ்வேறு துறைகளில் என்னைப் பணி செய்வித்தும், என் பிராரப்தம் தீரும் வரையிலும் எனக்கு உடல் நலமும் மனவளமும் நல்கி வரும் எம்பெருமான் வேங்கடவாணனை நினைந்து அவன் பொன்னார் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்குகின்றேன்.


1. திருவாய்.7,3,8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/9&oldid=1282451" இலிருந்து மீள்விக்கப்பட்டது