பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

103

என்று விளக்கினார். இதில் 'அடக்க'லை 'ஏமாப்பு' என்றார்.

'அடக்கம்' வேறு. 'அடக்கல்' வேறு. ஆனாலும், இரண்டும் தொடர்புடையவை. 'அடக்கம்' தானே அடங்குவது. 'அடக்கல்' தானே அடங்காமல் அவா எழும்போது அடக்கிக் கொள்தல்.

ஆமை இயல்பாகவே நான்கு கால்களையும் ஒரு தலையையும் உள்ளே - ஓர் ஓட்டிற்குள்ளே வைத்திருத்தல் 'அடக்கம்' அடக்காமல் வெளியே நீட்டி ஒரு பகை தோன்றும்போது உள்ளே இழுத்துக் கொள்ளுதல் 'அடக்கல்.’

இங்குக் திருவள்ளுவர் 'அடக்கல்’ என்பதை வற்புறுத்துகிறார்.

இக்கால உளவியலில் 'அடக்கல்' (Repression) என்பது ஒரு துறை. இதனை ஆராய்ந்தவர் ஆஃச்திரிய நாட்டறிஞர் சிக்மாண்டு பிராய்டு (Sigmond Freud) என்பார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் உளப்பகுப்பியல் (Psycho-analyses) என்னும் ஓர் இயலைப் புதிதாக நிறுவினார். இவ்வாய்வில் 'அடக்கல்’ ஒன்று, இவர் கருத்தின் படி 'அடக்கல்’ என்பது பல்வகை மனப்போராட்டங்களால் விளைவது. அவற்றுள் இரண்டை இன்றியமையாதனவாகக் குறிப்பர்.

1. 'தனியொருவனின் இயல்பான அவாவிற்கும் அவனின் நேர்மையான உணர்ச்சிக்கும் நேரும் மனப் போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

2. 'தனியொருவனின் அவாவிற்கும் மக்கள் மரபு பற்றிய எண்ணத்திற்கும் நேரும் மனப்போராட்டத்தால் விளையும் அடக்கல்.’