பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறிவியல் திருவள்ளுவம்

மக்கட் கூட்டம் இலக்கியங்களில் 'மன்பதை'[1] எனப் படும். அதனைத்தான் 'சமுதாயம்' என்கின்றனர். தமிழில் 'குமுகாயம்' என்று குறிக்கின்றோம். குமுகாய அமைப்பு இந்த இனநலத்தால்தான் உருவாகிறது. இன மாகக் கூடுவது தனியொருவர்க்கும் வேண்டியது; பொது மக்களுக்கும் வேண்டியது; நாட்டிற்கும் வேண்டியது. இனநலத்தால் அந்நலம் பெற்றவரோ, நாடோ ஏமம் பெறும். திருவள்ளுவர்.

"இனம் என்னும் ஏமம்" (306) என்று இனத்தையே 'ஏமம்' என்றார்.

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்கும் 'இனநலம்’ ஒரு பாதுகாப்பு. சான்றோர்க்கு மனநலம் நன்றாக அமைந்திருக்கும். ஆயினும்,

          "மனநலம் நன்குடைய ஆயினும் சான்றோர்க்கு
          இனகலம் ஏமாப்பு உடைத்து" (458)

சான்றோனாயினும் பொதுமக்களில் ஒருவனாயினும் உயிரோடு வாழும் வாழ்வு இம்மை வாழ்வு. உயிர் போனாலும் அவன் வாழ்நாளில் பெற்ற புகழ் உலகில் நின்று நிலவும். அப்புகழ் வாழ்வு அவனது மறுமை வாழ்வு. அண்ணல் காந்தியடிகள், வள்ளலார், பெரியார், சவகர்லால் தேரு, அறிஞர் அண்ணா முதலியோர் இயற்கை யெய்தினாலும் இன்றும் மக்கள் நெஞ்சில் புகழுடன் வாழ்கின்றனர். இவ்வாழ்வு அன்னாரின் மறுமை வாழ்வு. இந்த மறுமையைத்தான் திருவள்ளுவர் "உளதாகும் சாக்காடு" (235) என்றார். மறுமை வாழ்வு எவ்வாறு தொடர்கின்றது? அவர்களோடு நல்லினமாக இருந்தோர்


  1. கோவூர் கிழார் : புறம் : 68-10