பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அறிவியல் திருவள்ளுவம்

நாட்டைச் சூழ்ந்த கடல், மண்ணில் கட்டிய கோட்டை, இயற்கை மலை, பின்னிச் செறிந்து விளங்கும் இயற்கைக் காடு ஆகியனவெல்லாம் நாட்டிற்குப் பாதுகாப்பாக உள்ளமையால் திருவள்ளுவர் இவற்றை அரண்' (742) என்றார்.

இக்காலத்தில் போர்க்கருவிகள் பெரும் அழிவை விரைவில் ஏற்படுத்தக் கூடியன. வானவூர்தி வழித் தாக்குதலும், பீச்சிப்பாயும் பாய்விகளும் (Rockets), அணு குண்டும் பெருகிவரும் நிலையில் மேலே கூறப்பட்ட அரண்கள் வலுவிழந்தன ஆகலாம். ஆனாலும், இவையும் பாதுகாப்பளித்து வருகின்றன. கடல் அரணாக இருப் பதால்தான் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்து நகரின் எல்லையில் ஒரு கோட்டை உள்ளது. இதற்குள் சிங்களப்படையினர் தங்கிப் புலிகளுடன் மோதி வருகின்றனர். இவ்வகையில் இன்றும் கோட்டை ஏமமாக உள்ளது. இயற்கையான இமயமலை இன்னும் இந்திய நாட்டிற்கு ஏமமாக உள்ளது. யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு அங்குள்ள அடர்ந்த காடுகளே ஏமமாக உள்ளன. தீமையே செய்யும் சந்தனக் கட்டைக் கடத்தல் மன்னன் வீரப்பனுக்குச் செறிந்த காடுகளே ஏமம்; தீமைக்கு ஏமமாயினும் அவனளவிற்கு அரண் தான்.

அக்காலத்துக் கோட்டை அரண் தன் உள்ளேயே பெரும் வெட்டவெளியிடத்தைக் கொண்டது; கோட்டையில் சிறு சிறு பதுங்கு அவைகள் 'ஞாயிறு'1 என்னும் பெயரில் சிறு காப்பிடம் அமைந்திருக்கும். அதற்குள் பதுங்கியிருந்து தாக்குவர்.


மாங்குடி மருதனார் : மது. கா : 66