பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அறிவியல் திருவள்ளுவம்

இவை போன்றே கவியர் என்பது கவிஞர் என்று சுவையுள்ள மெருகுச் சொல்லாகியது. தமிழ்ப் பண்பாட்டு மொழியமைப்பையும் கொண்டது.

எனவே, திருவள்ளுவர் கவிதைப்பாங்கில் குறட் பாக்களைப் படைத்திருப்பதால் நல்ல மெருகுத் தமிழ்ச் சொல்லாம் கவிஞர்' என்பதை அடைமொழியாக்கிக் 'கவிஞர் திருவள்ளுவர் என்று போற்றுவது பொருத்தமே.

திருவள்ளுவர் அறிவியற் கவிஞரா?

‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி.

இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில் முளைத்துக் கிளைக்கும் பொருள் மக்களின் வாழ்வு, மரபு, வரலாறு, நாட்டுநிலை முதலியவற்றிற்கு உதவக் கூடியது. புதிர்களாக வரும் கருத்துப் பூட்டகங்களைத் திறக்கும் திறவுகோல்கள் பண்டைத் தமிழ்ச் சொற்கள்.

நூலாசிரியனோ, பாடம் சொல்லும் ஆசிரியனோ தவறாது கொள்ள வேண்டிய நெறியாக, மேலைநாட்டு அறிஞர் சான் கிரகாம் (John Graham) என்பார் ஓர் ஆழ்ந்த நெறியை அறிவித்தார்.