பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறிவியல் திருவள்ளுவம்

திருவள்ளுவர், ‘அளவு அறிந்து’ என்றதால்,

‘காண்டல் அளவை;
கருதல் அளவை’

எனும் இரண்டையும் குறித்துள்ளார் என்பதை நாம் கருத்தில் நிறுத்திக்கொண்டு, அறிவியல் கருத்தை அணுக வேண்டும்.

‘அறிவியல்’ என்பது அறிவைக் கொண்டு ஆய்ந்து உண்மையைக் கண்டு ஒரு முடிவிற்கு வருதல் ஆகும்.

இக்கால அறிவியல் வல்லுநர் அறிவியலுக்குப் பின் வரு மாறு விளக்கம் தந்தனர்.

‘உலக நிகழ்ச்சிகள் பல.
அவற்றைக் கூர்ந்து காணல்:
கண்டு ஒருங்கு சேர்த்தல்;
சேர்த்தவற்றை வகைப்படுத்தல்;
வகைப்படுத்தி அவற்றிடையே உள்ள
உள்ளார்ந்த தொடர்புகளை அறிதல்;
அறிந்தவற்றைக் கொண்டு அறியவேண்டிய
உண்மையைக் கருதிப் பார்த்தல்;
கண்டவற்றையும், கருதி அறிந்தவற்றையும்

ஒழுங்கு செய்து முடிவு காணலாம் அறிவுச் செயலே 'அறிவியல்’

இவற்றைச் சுருக்கமாகச் சொன்னால்,

நிகழ்ச்சிகளைக் காணல் - அவற்றைத் தொகுத்தல் - அவற்றுள் தொடர்பு காணல் - கருதல் - உண்மை முடிவு கொள்ளல் என அமையும்.