பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை இளஞ்சேரன்

41

என்னும் காற்றை வழங்கிய தாய் பூவுலகம் என்னும் நம் ஞாலம். பூவுலகைச் சுற்றிதான் காற்று உலவி இயங்குகிறது ஞாயிறு என்னும் வெப்ப ஆவியிலிருந்து சிதறிய உருண்டையாம் பூவுலகம் காலப்போக்கில் ஆறி, ஆறி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஒர் இயல்பமைந்த சூழல் அமைந்தபோது இயற்கைத் தோற்றமாக உயிரினம் முளைத்தது. உயிரினம் பிறப்பதற்குப் பிறப்பு அணுக்களே மூலகாரணம். கதிரவன் பூவுலகின் தாய், பூவுலகம் உயிரினங்களின் தாய். இந்தத் தாய் உயிரினங்களை ஈன்றெடுக்கும் கருவாகப் பிறப்பு அணுக்களைக் கொண்டிருந்தது. இது தாய்க் கருப்பையில் உள்ள பெண் கரு முட்டையைப் போன்றதே. கருத்தரிக்க ஆண் கரு வேண்டுமன்றோ, வானத்தில் இயங்கும் பிற கோள்களிலிருந்து சில பிறப்பணுக்கள் பூவுலகில் புகுந்தன. இவற்றின் அறிய இயலாத புணர்ச்சியால் பூவுலகத்தாய் சுருக்கொண்டாள். முதலில் முதற்கணியம் (Protoplasm) தோன்றியது. பின் 'கூழ்மம்' (Collied) உருப்பெற்றது. அது ஊன் வடிவுற்று 'ஊன்மம்' ஆயிற்று. ஊன்மத்திலிருந்து புழு தோன்றிப் படிப்படியாக உடலுருவம் வளர்ந்து வளர்ந்து படிப்படியாக மலர்ந்தது. இந்தப் படிமலர்ச்சி (Evolution பரிணாம வளர்ச்சி)யில் மாந்தன் தோன்றினான். எவ்வகை உயிராயினும் அதற்கு மூலம் ஐம்பெரும் பூதங்கள். அவற்றில் காற்று ஒன்று. அது பல வகையில் இன்றியமையாதது.

வளி மண்டிலம்

இக்காற்று பூவுலகைச் சூழ்ந்துள்ளது. உயிரினம் தோன்றுதற்குரிய காற்று பூவுலகச் சூழலில் தான் உள்ளது. காற்று என்பது ஒரு கலவைப்பொருள். அவற்றுள் உயிர்வளி (Oxygon) உயிரினங்களையும் மாந்தரையும் உயிர்ப்பிக்-

அறி-3