பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறிவியல் திருவள்ளுவம்

உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார் சொல்லினர்.

தேரையர் என்னும் மருத்துவத் தமிழறிஞர்,
"அரசன் வாதமொடு அமைச்சன் பொருநன்" என்றும்

"தான் (வளி), மனை (பித்தம்), சேய் (கோழை) மன்னன், அமைச்சன், மீளி"[1] என்றும் பாடினார். தேவாரம் பாடிய அப்பரும்,

"ஆனது இக்காளை (கோழை) அமைச்சை (பித்தத்தை) மேவிடின் ஆன் இறை (வளி) உறின்" [2] என்று உருவகித்துப் பாடினார்.

இத்துணை ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டவை வளி முதலிய மூன்றும், இவற்றைக் கொண்டு நோயையும் கண்டறியலாம். மருந்தையும் கொடுத்தறியலாம் . இம்முறை இக்கால மருத்துவ அறிவியலில் இல்லை என்பது கருதத்தக்கது.

இம்முறை கொண்ட தமிழ் மருத்துவம் ஒரு தனித் தன்மை உடையது. திருவள்ளுவரின் இக்குறள் இத்தனித் தன்மையை எடுத்து மொழிகிறது. மொழிவதன் மூலம் அக்கால நோய் அறிவியலை அறிமுகம் செய்கிறது.

இது நோய் தோன்றுவதன் கருநிலை கூறுவது.


  1. தேரையர் : தேரையர் கரிசல்
  2. திருநாவுக்கரசர் : தேவாரம்