பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அறிவியல் திருவள்ளுவம்

செவிலியர் முறை முன்னரே இருப்பினும் அதனை முறை யாக்கி நிறைவாக்கிய பெருமை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நைட்டிங்கேள் என்னும் பெருமகளையே சார்ந்தது. இவ்வம்மையால்தான் மருத்துவத்தில் செவிலித் தொண்டு முறைப்படுத்தப் பெற்றது.

இது திருவள்ளுவரால் கி. மு. முதல் நூற்றாண்டில் முறைப்படுத்திக் கூறப்பட்டுள்ளமை மருத்துவ அறிவியலின் அணுக்கத்தைக் காட்டுகிறது.

மருந்தில் தொடங்கி மருந்தில் நிறைவு

மருந்தை கூறத் துவங்கியவர் இதன் முதற் குறளாக "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று நோய்க்குக் காரணத்தைக் காட்டி அடுத்து, மருந்து பற்றித் தொடங்கினார்.

அதன் தொடக்கம் "மருந்து என வேண்டாவாம்’. என்றதைக் கண்டோம். 'மருந்து' என்னும் சொல்லுடன் தொடங்கினார். நிறைவான பத்தாவது குறளில், "அப்பால் நாற்கூற்றே மருந்து" என்று நிறைவேற்றினார். 'மருந்து' என்று தொடங்கி மருந்து என்று நிறை வேற்றியமை ஒரு சொல்லமைப்பு நயம் மட்டும் அன்று: இவ்வமைப்பில் உள்ள ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்தக்கது

முதலில் "மருந்து என வேண்டாவாம்" என்று மருந்து வேண்டாம் என்றார். நிறைவில்

"அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று மருந்து வேண்டுவதைக் குறித்தார். வேண்டா என்றவர் 'வேண்டும்' என்றது முரணா? அரணா? இரண்டில் எது என்று அறிய இக்கால அறிவியல் துறை ஒன்றைக் காண வேண்டும்.