பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அறிவியல் திருவள்ளுவம்

முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும் என்பதை எண்ணிய திருவள்ளுவர்.

                "மருந்தை எண்ணி அஞ்சாதே! கசக்குமே,
                குமட்டுமே என்று கலங்காதே!
                மருந்தே வேண்டாம்"

என்று தொடங்கினார். மருந்து வேண்டாம் என்பதைக் கேட்ட நோயாளி முதலில் மன அமைதியைப் பெறுவான். இதனால் நோயாளி மருந்துவத்திற்கு பாங்குபடுத்தப் பட்டவனாவான்.

தொடர்ந்த திருவள்ளுவர் பையப் பைய அவனை நோய் கொள்ளாதிருக்கும் உணர்வில் வைத்து விளக்கி நலத்திற்கு அரண் கோலினார்; நோய் தாக்காதிருக்க வழிகோலினார். வயிற்றுத் தீயெல்லாம் கூறிக் குறிப்பைக் காட்டினார். ‘மிகு உணவு மிகு நோய்' என்று அறிவுறுத்தினார். இவ்வாறெல்லாம் மாந்தனைப் பாங்குக்குக் கொணர்ந்தார். பின்னர்தான் 'தீர்ப்பான்' என்று மன அமைதியை ஊட்டினார். உனக்கு அணுக்கமாக இருந்து துணைநிற்போர் உள்ளனர் என்று ஆறுதல் காட்டினார்; மருந்து கூறினார். அதனையும் மருந்து ஒன்றைக் கூறி விடாமல் நான்கு கூறாகக் கூறி அவற்றில் ஒன்றாகக் கூறினார்.

இவ்வாறு உள்ளத்தைப் பாங்குபடுத்தி உடலின் மருத்திற்கு வருவது இக்கால மருத்துவ அறிவியலாக முன்னர் குறித்த 'உடலிய உளவிய'லை நாம் நினைவு படுத்திக் கொள்ளவைக்கிறது.

இந்த 'உடலிய உளவியல்' தொடர்பில் மேலும் ஒரு திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைக் காண இடம் உள்ளது.