பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

87

திருவள்ளுவர் இவற்றையெல்லாம் அடக்கியே "விளையுள்" (545, 731) "விளைவது" (732) எனக் குறித்தார்.

இவ்வாறு விளைச்சல் பலவகைப்படினும் சிறப்பாகப் பருப்பொருள் விளைச்சல் முதன்மையானது. அதனிலும், உழவுப் பயிர் விளைச்சல் மூலமானது. திருவள்ளுவர் இம்மூலமான உழவையே முதற்குறிக்கோளாக வைத்தார்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" (1031) என்றமை இன்று உலகில் மாற்றமின்றி உள்ளது. தொழில் பற்றிய இக்கால அறிவியல், உழவைத்தான் முதல் தொழிலாகக் கொண்டுள்ளது.

உழவு தமிழரின் தனி உரிமைத் தொழில். மிகத் தொன்மைய மக்களினத்தாருள் மிகச்சிலரே இத்தொழில் கொண்டோர். ஆசிரியர் எனப்படுவோர் உழுதொழிலை இழிவாகக் கருதினர்.

                "இழிவான உழுதொழிலைச் செய்யும்
                பார்ப்பானைச் சிரார்த்தம் முதலிய
                சடங்குகளுக்கு அழைக்காதே"

என்று மனுநூல் விதித்தது.

திருவள்ளுவர் உழவு என்றொரு தனி அதிகாரத்தை அமைத்து அதனில் பத்துக் குறட்பாக்களைப் படைத்தார். இப்பத்துக் குறட்பாக்களில் உழவின் இன்றியமையாமை, உழவுமுறை, உழவுப் பயன் ஆகியன தெளிவாக்கப்பட்டுள்ளன.

இக்கால 'உழவியல்' விளக்கங்கள் திருவள்ளுவத்தின் அடிப்படை கொண்டவையாக அறிமுகமாகின்றன. இன்றியமையா இரண்டை இங்குக் காணலாம்.