பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அறிவியல் திருவள்ளுவம்

        "நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
        அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
        அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு"[1]

என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் 'இன்பம்’ எனப்படுவது.

எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.

        "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
        கூடி முயங்கப் பெறின்" (1330)

என்றதில் 'கூடி முயங்கப் பெறும் இன்பம்' உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.

எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.

உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறி வியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.

உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத்


  1. தொல்காப்பியர் : தொல் : பொருள்-247