பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

91


இத்துணைப் பொருள்களையும் ஆருயிர்கள் உடல்களைப் பெற்று நுகருகின்றன: துய்க்கின்றன; அநுபவிக்கின்றன. அறம் பொருள், இன்பம் ஆகிய மூன்று செயல்களையும் புரிகின்றன. பிறவிப் பயனாய்ப் பெற வேண்டியது, முக்தி - வீடுபேறு. அதனை அடையும் உணர்வையும், அதனை அடையும் வழிகளையும் ஆருயிர்களுக்குக் காட்டுகின்றான், ஆண்டவன். இதனை,

"முக்தியென் றொருநிலை
சமைத்தாப் - அங்கு
முழுதினையு முனரும்
உணர்வு அமைத்தாய்
பக்தி என்று ஒருநிலை
வகுத்தாய் - எங்கள்
பரமா!பரமா! பரமா!"27

உலகிலுள்ள சமயங்கள் : உலகில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பாரதியார் இவற்றை,

"பூமியிலே கண்டம்ஐந்து, மதங்கள். கோடி!
புத்தமதம், சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுமதம் போற்றும் மார்க்கம்
சநாதனமாம் இந்துமதம் இஸ்லாம்! யூதம்
நாமமுயர் சீனத்துத் 'தாவு' மார்க்கம்
நல்ல'கன் பூசி' மதம் முதலாம் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே."28

என்ற பாடவில் குறிப்பிடுவார். நம் நோக்கம் இவற்றை யெல்லாம் விளக்குவதன்று. இவற்றுள் சிலவற்றை மட்டிலும் ஈண்டு விளக்கலாம் எனக் கருதுகின்றேன்.


27. பா.க : தோ.பா. - இறைவா! இறைவா! என்ற பாடலில் அமைத்துக் காட்டுவதில் முக்தி என்ற ஒரு நிலையையும் அமைத்துக் காட்டிய பேருத வியையும், அதனை அடைவதற்கான பக்தி என்ற வழியை வகுத்துக் காட்டிய அற்புதத்தையும் வியப்புடன் நினைத்து நன்றியுடன் போற்றுகின்றார், கவிஞர். 28. பாரதியார் - சுயசரிதை - 85