பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


நம் நாட்டில் தோன்றி வளர்ந்த பழைய சமய நெறிகளை மூன்றாய்ப் பகுத்துரைக்கலாம். அவை : (1) ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்து வெளி மக்களின் சமயநெறி, (ii) வேத நெறிகள் அல்லது வைதிக நெறிகள், (iii) வேதங்களைப் புறக்கணித்த நெறிகள் என்பனவாகும். சிந்துவெளி நாகரிகம் மறைந்த பின்னர் எழுந்த வேதநெறியினர் சிந்துவெளி சமயக் கருத்துகள் சிலவற்றை மேற்கொண்டிருக்கலாம். எனவே, வேத நெறியினர் தமக்கெனச் சில வேள்விகளையும் சடங்குகளையும் தெய்வங் களையும் வழிபாட்டு முறைகளையும் அமைத்துக்கொண்ட போக்கினை உபநிடத நெறியினர் ஒருபுறமும்; உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகியவற்றைப் பின்பற்றுவோர் மறுபுறமும் கண்டனம் செய்தனர். வேதநெறி கரும மார்க்கத்தை வற்புறுத்தும்; உபநிடத நெறியோ ஞானநெறியை வலியுறுத்தும்; உபநிடதங்கள் ஆரியரல்லா தாரின் சிந்தனைகளைக் கொண்டவை என்றும், வினைக் கொள்கை ஆரியர்க்கு முற்பட்டது என்றும் டாக்டர் A.L. பாஷம் என்பார் ஆய்ந்துள்ளார். ஆகவே, உபநிடதங்கள் வேதங்களின் சாரமாய், முடித்த முடிபாய் அமைந்தவை எனக் கருதப்பெறுவதால், உலகாயதம் (சாருவாகம்), ஆசீவகம், சமணம், பெளத்தம் ஆகிய நான்குமே வைதிக நெறிகளை முழுமையாகவே புறக்கணித்த புரட்சி நெறிகள் எனலாம். இவை புறச்சமய நெறிகள்என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றன.

வரலாற்று முறையில் சமயங்களை நோக்கினால், மன அமைதிக்காய், மனித நேயத்திற்காய், வாழ்க்கையை வளமாக்கு வதற்காய் அருளாளர்களால் (prophets) இவை தோற்றுவிக்கப் பெற்றன என்பது புலனாகும். ஆனால், பிற்காலத்தில் அவற்றை நெறிப்படுத்தி வழக்கத்திற்குக் கொண்டுவந்த குருமார்கள் (Priests) அரசர்களை மயக்கித் தம் வசமாக்கிக்கொண்டு மதத்தின் பெயரால் கொடுமைகளை இழைத்த செய்திகளும், வரலாற்றில் உள்ள சைவ-வைணவப் போராட்டங்கள், சமண சைவப் போராட்டங்கள், சிலுவைப் போர்கள் (Holy wars), நூற்றாண்டுப் போர்கள் போன்ற நிகழ்ச்சிகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. போகிற போக்கில் இவற்றையும் சிந்திக்கின்றோம். பாரதியார் இவற்றையெல்லாம் இலக்கியச் கவையுடன் தம் சுயசரிதையில் பதிய வைத்துள்ளார்.


29. History and Doctrines of the Ajivakas - pp.4-5.