பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

97


ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயத்தைத் தவிர நிலம், நீர். காற்று, நெருப்பு என்ற நான்கும் அணுக்களால் ஆனவை. அணுக்களின் சேர்க்கையால் இப்பூதங்கள் உண்டாகின்றன. இவ்வைந்து பூதங்களால்தாம் இந்த அகிலம் முழுவதும் தோற்று விக்கப்பெற்றுள்ளது என்பது இத்தத்துவம். இந்த ஐந்து பூதங்களோடு காலம், இடம், மனம், ஆன்மா என்ற நான்கும் சேர்ந்து, ஆக மொத்தம் ஒன்பது திரவியங்களாலாகியது, இந்த அகிலம் என்பது இத்தத்துவத்தின் கருத்து. இவ்வாறு மாறுவதற்குக் கடவுள் காரணமாகின்றார் என்பதையும் இத்தத்துவம் ஏற்கின்றது.

(4) நியாயம் : இதனை நையாயிகம் என்றும் வழங்குவர். 'நியாயம்' என்ற சொல் 'நய' என்ற வேர்ச் சொல்லின் அடியாய்த் தோன்றியது. மெய்ப்பொருள் முடிபிற்கு உய்க்கும் வழிகளை ஆராயும் அறிவியற்கலைதான் நியாய தத்துவம் ஆகும். உயர்ந்த தர்க்க ஞானத்தினால் ஆராயப்பெற்ற உண்மைகளைக் கூறுவது இது. பிரடத்தியட்சப்பிரமானத்தையும்35 தர்க்க நியாயத்தையும் அடிப்படையாய்க் கொண்டது, இந்தத் தத்துவம்.

நியாய தத்துவம் உலகில் உள்ள பொருள்கள் யாவும் உண்மை என்று கூறும். உலகப் பொருள்களின் ஆக்கத்திற்கு அணுக்களே மூலப்பொருள் என்ற வைசேடிகர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, இத்தத்துவம். ஆன்மாவும் உண்மைப் பொருள். சைதன்யம் அல்லது அறிவுடைமை அதன் சிறப்பியல்பு. இந்தச் சிறப்பியல்பு ஆன்மா உடலோடும் மனத்தோடும் ஒட்டியிருக்கும் போதுதான் ஏற்படுகின்றது. உடலும் மனமும் இல்லையேல் ஆன்மாவிற்குச் சைதன்யம் இராது என்பது இத்தத்துவத்தின் விளக்கம். உணர்வுகளற்ற ஆன்மாவாய் மாற முயல்வதே முக்தியாகும். கடவுள் உண்டென்பது இத்தத்துவத்திற்கு உடன்பாடு. கடவுளும் ஓர் ஆன்மா என்று கூறுகிறது, இத்தத்துவம். ஆன்மாவைச் சீவான்மா என்றும், கடவுளைப் பரமான்மா என்றும் குறிப்பிடுகிறது. உலகைப் படைத்தல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் கட்வுளது கடமைகளாகின்றன. கடவுள் நியமித்த காரணன் என்று விளக்குகின்றது, இத்தத்துவம்.


35. உண்மையினை அளக்க உதவும் கருவியினைப் 'பிரமாணம்' என்பர், வடநூலார். அழகிய தமிழில் இதை அளவை என்று கூறுவர் (சாத்தனார்).