பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


ஞானம் உடைமை. இதுவே தர்மபூத ஞானம் என்பது, பரமான்மாவின் ஞானம் முழுமையானது; ஆன்மாக்களின் ஞானம் முழுமையுடையதன்று. இந்த ஞானத்தின் துணையின்றி ஆன்மாக்கள் இயங்க முடியாது. இன்பம், துன்பம், ஆசை, நிராசை போன்றவை தர்ம்பூத ஞானத்தின் வடிவங்கள்.

ஆன்மா முத்தியடையக் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று வழிகள் உள்ளன. பக்தி, உயர்ந்த வருணத்தார்க்கே உரியது. எல்லோரும் எளிதில் அனுட்டிக்ககூடிய வழி, பிரபத்தி! இதுவே சாணாசக்தி என்பது. இவற்றிற்கெல்லாம் பெரிய பிராட்டியார் புருஷகாரமாய் (பரிந்துரைப்பவளாய்) இருப்பதாய்க் கொள்வது வைணவ தத்துவத்தின் சிறப்பாகும். இது சக்தியின் செயற்பாடு.

இராமாநுசம் தமிழகத்தில் ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். சங்கரரைப்போல இவரும் பிரம்மசூத்திரத்திற்கும் கீதைக்கும் விளக்க உரைகள் எழுதியவர். பிரம்மசூத்திரத்தின் விளக்கவுரையே மிகுபுகழ் பெற்ற ஶ்ரீபாஷியம் ஆகும். வைணவம் பற்றிய கருத்துகள் அனைத்தும் விவரமாய் இந்நூலில் விளக்கப்பெற்றுள்ளன. [1]

(iii) துவைதம் : இது மத்துவ வேதாந்தம் என்றும் வழங்கப்பெறும். ஆன்ம வேறு, இறைவன் வேறு; இரண்டும் என்றுமே ஒன்றாவதில்லை என்பது இவர் தரும் விளக்கம். இத்தத்துவப்படி ஈசுவரன், சீவன், சடம் ஆகிய மூன்றும் அநாதியானவை; உண்மையானவை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை. திருமாலே பரம்பொருள். பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்னும் பிரமாணங்களையே ஒப்புக்கொள்வது இத்தத்துவம். உபநிடதங்களைவிடப் புராணங்களையே அடிப்படையாய்க் கொள்வது. சீவன் முக்தி என்ற கருத்து இவர்களிடம் இல்லை; அதைப்பற்றி அதிகமாய்ப் பேசுவதும் இல்லை. சில ஆன்மாக்களுக்கு உய்தி பெறும் வழியே இல்லை. எப்பொழுதும் இவை நரகத்தில் உழலும் என்ற கருத்தைக் கொண்டது. வீடுபேற்றிலும் ஆன்மாக்களின் வாழ்வு அவர்தம் இயல்புகளுக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வுகளோடுதான் ஆனந்த நிலையைப் பெற முடியும் என்பதும் இக்கொள்கையின் ஒப்ப முடிந்த முடிவு.


  1. முத்தி நெறி - சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் (டி.டி. கே. சாலை, சென்னை - 18)