பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


இந்தியாவில் மகத நாட்டில் தோன்றியது. இச்சமயத்தை நிறுவியவர் மற்கலி ஆருக மதத்தை என்பவர்[1] (சமணத்தை) நிறுவிய மகாவீரரும், புத்த மதத்தை நிறுவிய கௌதம புத்தரும் வாழ்ந்த காலத்தில் இருந்தனர். மகாவீரர் ஆருக மதத்தை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி, அவரிடம் சென்று தம்மை ஆட்கொள்ள வேண்டினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட போக்குகளை அறிந்த மகாவீரர் அதற்கு முதலில் உடன்படவில்லை. ஆயினும், எவ்வாறோ உடன்பாடு பெற்றுச் சில காலம் அவரிடம் தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்து சென்று, ஒரு புதிய சமயத்தை உண்டாக்கினார். அதுதான் ஆசீவகம் என்பது. ஆருகத சமயக் கொள்கைகள் சிலவற்றையும் தாம் உண்மை என்று கண்ட சிலவற்றையும், திரட்டி, முன்னதனுடன் சேர்த்து இந்தப் புதிய ஆசீவக மதத்தை நிறுவினார் எனக் கூறப்பெறுகின்றது.

மகாவீரரும் புத்தரும் இவர் காலத்தவர்களாயினும் இவர்கள் இருவருக்கும் முற்பட்டவர் மற்கலியே என்பது பாலிபீடகங்களாலும் சமண சூத்திரங்களாலும் அறியப்பெறுகின்றது. மற்கலி சற்றேறெக்குறைய கி.மு. 500 இல் காலமானதாய்க் கருதப்பெறுகின்றது. இதற்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் மகாவீரர் வீடு பெற்றார் என்பர்.இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் பெருமான் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர், பெளத்தர், சமணர், வைதிகர் ஆகிய இந்த சமயத்தவர்களுள் எப்போதும் சமயக்காழ்ப்பு இருந்துகொண்டிருந்ததாய் அறியக் கிடக்கின்றது. பாலி, பாகதம், சிங்களம், தமிழ் ஆகிய நான்கு மொழிநூல்களிலும் ஆசீவகம்பற்றிய செய்திகள் மிகுதியாய்க் காணப்பெறுகின்றன.

ஆசீவகம் - பொருள் : ‘ஆசீவகம்’ என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்களைப் பகர்ந்துள்ளனர்.

(i) சீவ - வாழ்க்கை; அ - சீவ - வாழ்வின்மை. ஆதலின், பிறர் தயவில் (ஐயமேற்று) வாழும் துறவி எனப் பொருள் கண்டார் பர்னோவ் (Burnouf).

(ii) சீவனை உண்ணாதார் (புலால் மறுத்தவர்) ஆசீவகர் எனப் பொருள் உரைத்தார் லேசன் (Lassen) என்பார்.


  1. மற்கலிக்குப் பூரணர் என்ற பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின் அவருக்கு இப்பெயர் உண்டாயிற்று என்பர். (பூரணருடைய இயல்பு. ‘நீலகேசி’ ஆசீவகவாதச் சுருக்கம், 15ஆம் பாடல் - உரை காண்க.)