பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


புலப்படும். அணுத்திரளைகளான பொருள்தான் (Molecule) அனைவருக்கும் புலப்படும். இக்கருத்தினை,

“ஓர்அணு தெய்வக் கண்ணோர் உணர்குவர்
மாலைப் போதில் ஓர்மயிர் அறியார்
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்” (மேலது 27:146-9)

என்று ஆசீவகவாதியின் விளக்கமாய் அமைகின்றது. சாத்தனார் காலத்தில் ஆசீவகத்தில் அணுக்கொள்கை தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆசீவகரைப் பின்பற்றியே சமணர்களும் அணுக்கொள்கையை வளர்த்துக்கொண்டனர்.

(ii) நியதிக்கொள்கை : தன் இச்சைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களால் செயல்கள் தீர்மானிக்கப்பெறுகின்றன என்ற கருத்தில் ஆசீவகர் நியதிக் கொள்கையினைக் கடைப்பிடித்தனர். உலகாயதத்தைத் தவிர, எல்லாச் சமயங்களும் வினைக் கொள்கையினை ஏற்கின்றன. ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி கோகாலர், வினைகள் மனிதனின் இன்பதுன்பங்களை ஆக்கவில்லை என்றும், ஒத்த ஆற்றலுடைய இருவர் புரியும் ஒரே வினை ஒருவர்க்கு இன்பமும் மற்றவர்க்குத் துன்பமும் தருதலால், வினைகள் பயன்தரவில்லை என்றும், நியதிப்படிதான் இவை விளைகின்றன என்றும், உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் நியதியின் ஆற்றலால்தான் நடைபெறுகின்றன என்றும் கருதுகின்றார். “எவ்வளவு முயன்றாலும் உளதாதலைப் போக்கவோ இலதாதலை ஆக்கவோ இயலாது; எந்தச் செயலும் வினைகளால் தீர்மானிக்கப்படவில்லை; நியதியால்தான் முடிவு கட்டப்பெறுகின்றது; ஆதலின் மனித முயற்சிகள் பயனற்றவை. வலியார் மெலியார் அனைவருமே நியதிக்கும் அதன் வெளிப்பாடாகிய எதேச்சை (Chance) சுபாவங்கட்கும் முழுமையாய்க் கட்டுப்பட்டவர்கள். நியதி வெளிப்படுமிடத்து எதேச்சையாகவும் சுபாவமாகவும் தோன்றும்” என்பது இவர் கருத்து. ஆதலின், ஆசீவகம் எல்லா உயிர்களும், ஒரு கால எல்லைவரையில் நன்மை தீமைகளைக் கட்டாயம் நுகர்ந்து, பின்னர் வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட கால இறுதியில் விடுதலை அடையும் என்ற பரந்த நியதிக் கொள்கையினைத் தெளிவுறுத்துகின்றது. நியதிக் கொள்கையும் வினைக்கொள்கைகளும் அருமறைகளில் காணப்பெறவில்லை. இவ்விரண்டும் திராவிடப் பெருமக்களுக்கு