பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

113


என்று குறிப்பிடப்பெறும். இளங்கோ அடிகள் (சமணர்) தங்கியிருந்த இடம் ‘குணவாயிற்கோட்டம்’ என்பது சிலப்பதிகாரத்தால் அறியும் செய்தியாகும். அக்காலத்தில் கடவுட்கோயில்களையும் ‘கோட்டம்’ என்ற பொதுச்சொல்லால் குறித்தனர். புறநானூற்றில் (299) பொன்முடியார் முருகன் கோயிலை ‘அணங்குடை முருகன் கோட்டத்து’ குறிப்பிட்டிருத்தலால் இதனை அறியலாம். சென்னையில் கந்தசாமிக் கோயிலை வள்ளல் பெருமான் ‘கந்தகோட்டம்’ என்று வழங்குதல் காண்க.

அருகன் கோயிலை ‘நிக்கந்தக் கோட்டம்’ என்று குறிப்பிடுவர். இளங்கோ அடிகள், ‘நிர்க்கிரந்த’ என்ற வடமொழியின் பாகதச்சிதைவாய் ‘நிக்கந்தன்’, ‘நிகண்டன்’ என்ற சொற்கள் வழங்கும். இச்சொல் ‘கிரந்தம் இல்லாதவர்’ எனப் பொருள்படும். சமண மரபுவழிச் செய்தியின்படி அங்கம் 12, உபாசங்கம் 12, பிரகீரணம் 10, சேத சூத்திரம் 6, மூலசூத்திரம் 4. தந்தி, அனுயோகதாரம் ஆகிய நூல்கள் சித்தாந்தம் அல்லது ஆகமம் எனப் பெயர் பெறும் என்றும், இவற்றை மகாவீரர் அருளிச் செய்தனர் என்றும் அறியப்பெறும். ‘அங்கம் பயந்தோன்’ என்பது இளங்கோ அடிகளின் திருவாக்கு.

மகாவீரரின் (24ஆவது தீர்த்தங்கரர்) வாய்மொழிகளுக்கு நூல் வடிவம் தந்தவர்கள் அவரது உத்தம சீடர்கனான கணாதரர் பதினொருவர். இந்நூல்களேயன்றி 14 பூர்வங்களும் மகாவீரரால் கணாதரர்களுக்குப் புகட்டப்பெற்றன என்றும், கி. பி. 4ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் பாடலிபுரத்திலிதத்து ஆண்ட காலத்தில் நேரிட்ட பஞ்சம் காரணமாய் இவை அழிந்துபட்டன என்றும் அறிஞர் கருதுவர். இம்மன்னன் காலத்தில்தான் பத்திரபாகு என்ற சமணப்பெரியாரின் தலைமையில் எண்ணாயிரம் சமணர்கள் தென்னாடு போந்து ‘சிரவண பெல் கொள’ (கர்நாடகம்) என்ற இடத்தில் தங்கினர் என்றும், தென்னாட்டிலும் இலங்கையிலும் சமணம் பரவியதற்கு இவர்களே காரணம் என்றும் அறிகின்றோம்.

தாயகத்தில் தங்கிவிட்ட சமணத்துறவியர் அனைவரும் தூலபத்திரர் என்ற பெரியாரின் தலைமையினை ஏற்றனர். பஞ்சம் தணிந்ததும் பாடலிபுரத்தில் தூலபத்திரரின் தலைமையில் சமணச் சான்றோர் அனைவரும் கூடி மேற்கூறிய அங்கம்,