பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


உபாங்கம் முதலிய நூல்கள் பலவற்றையும் தொகுத்தனர். எனினும் தாயகம் திரும்பிய பத்திரபாகுவின் கூட்டத்தார் இந்நூல்களை மகாவீரரின் வாய்மொழிகளாய் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அன்றியும் துறவியார் வெள்ளாடை உடுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தூலபத்திரர் குழுவும் ஆடையும் மிகை என அம்மணமாய் நின்ற பத்திரபாகுவின் குழுவும் முறையே கவேதாம்பர, திகம்பரப் பிரிவுகளுக்கு வித்திட்டன என்பதையும் அறிய முடிகின்றது. இக்கொள்கை வேறுபாடு பழமையானதுதான். 23 ஆவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் வெள்ளாடை உடுத்தலையும், 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரர் ஆடையின்மையையும் (தர்க்கிரந் தத்துவம்) வற்புறுத்தினர். கி. பி. 79 (அல்லது 82) இல் திகம்பர, சுவேதம்பரப் பிரிவுகள் நிலைபெற்றன. சுவேதம்பரர்களின் கிரந்தங்களை உடன்படாத திகம்பரர்களுக்கு நிர்க்கிரந்தர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. மேலும் ‘கிரந்தம்’ என்ற சொல் நூல், ஆடை என்ற பொருள் தருதலின் ஆடையற்ற திகம்பரருக்கு ‘நிர்க்கிரந்தர்’ என்ற காரணப் பெயர் வழங்கியதாகவும் கருதலாம்.

சமணர்களின் கொள்கைகள் : உலகப் பொருள்கள் உண்டாதற்கு - அஃதாவது, அவற்றின் தோற்றத்திற்கு மூலப் பொருள் ஒன்றன்று, பல என்பது சமணர்களது கொள்கை. பிரம்மம் அல்லது கடவுள் என்ற ஒன்றுதான் அனைத்துத் தோற்றத்திற்குக் காரணம் என்ற கருத்தைச் சமணர்கள் ஒப்புக்கொள்வதில்லை. சமணக் கொள்கைப்படி உலகிலுள்ள பொருள்கள் யாவும் (1) உயிருள்ளவை (2) உயிரற்றவை (சீவன், அசிவன்) என்ற இருபிரிவுகளில் அடங்கும். ஆன்மா என்ற ஒன்று உண்டு என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், ஒவ்வொரு சீவனிடத்தும் ஒவ்வோர் ஆன்மா உள்ளது என்று கூறுவர். சீவன் (ஆன்மா) ஓர் உயிருள்ள உடலில் சார்ந்திருக்கும்போது அஃது அந்த உடல் முழுவதும் பரவி இருக்கும். அஃது உடலுடன் இருக்கும்போது கட்டுண்டு அறிவு மழுங்கி இருக்கும்; உடலை விட்டுப் பிரிந்திருக்கும்போது தெளிவாகவும், ஞானத்துடனும், சாந்தமாகவும், புலன்களால் கட்டுப்படாமலும் இருக்கும். உடலுடன் சார்ந்திருக்கும் ஆன்மாவைப் பெத்தநிலையிலுள்ளது என்றும், உடலை விட்டுத் தனித்திருக்கும்போது ஞானநிலையில் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுவர். ஆசீவகத் தொடர்பால் மழுங்கிய ஞானத்தை ஒளியூட்ட முயல்வதே வாழ்க்கையின் நோக்கம். உடலில் சிக்குண்டு அறிவு மழுங்குவதற்குக் காரணம், கன்மம்;