பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

115


வினை. இதனைப் போக்க வழி காணல் வேண்டும். இந்நூல் ஆன்மாவைப்பற்றிய சமணதத்துவம், உலகிலுள்ள எல்லாப்பொருள்களுக்கும் சீவன் உண்டு மரம், உலோகம், கற்கள் முதலிய யாவும் சீவத் தன்மையுடையவை ஆனால், அவற்றின் சீவத்தன்மை சற்றுக் குறைவாகவே இருக்கும் என்பதுவே அவர்களுடைய சித்தாந்தம். கடவுள் என்ற ஒன்று உண்டு என்ற கருத்தைச் சமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆன்மாக்களின் வகைகள் : சமணர்கள் உயர்நிலை ஆன்மாக்களை மூன்று வகைகளாகப் பகுத்துரைப்பர்.

(i) சித்தர்கள் எனப்படும் விடுபட்ட ஆன்மாக்கள். இவர்களுள் தீர்த்தர் அல்லது தீர்த்தங்கரர் முதன்மையர். சாமானிய சித்தர்கள் அடுத்த நிலையினர்.

(ii) எல்லாக் குணங்களிலும் அறிவிலும் முழுகைத்தன்மை எய்திய அருகர்கள் (தீர்த்தங்கரர்கள்)[1]

(iii) சிரமணர் எனப்படுவோர். இவர்களும் மூவகையினர்.

(அ) ஆசாரியர் அல்லது கணாதரர்.

(ஆ) உபாத்தியாயர் அல்லது அத்யாபகர்.

(இ) சாதுக்கள்

குந்தகுந்தாச்சாரியர் தென்னாட்டவர் என்றும், இவருக்கு ஏலாச்சாரியர் என்ற மறுபெயரும் உண்டென்றும், திருக்குறளின் ஆசிரியர் இவரே என்றும் சமணர்கள் சாற்றுவர். இவர்தம் பிரவசன சாரத்தின் 41ஆம் பாடலில் அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவர்க்கும் வணக்கம் கூறியுள்ளார். ஆதலின், இதே நூலின் முதற்பாடலில் குறிக்கப்பெறும் கணாதரர் என்பார் ஆசாரியர் என்றும், அத்யாபகர் என்பார் உபாத்தியாயர் என்றும் அறிகின்றோம். மகாவீரரின் பதினொரு தலையாய சீடர்தாம் சமண கணங்களுக்குத் தலைவர்களாய் விளங்கினர். இவர்கள் இந்திர பூதி, அக்கினிபூதி, வாயுபூதி முதலியோராவர். தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் இடபதேவர், நேமிநாதர், மகாவீரர் முதலியோரின் வழிபாடு பெருவழக்காய் இருந்தது. கணாதாரரேயன்றி ஆசாரியர்


  1. 40. தீர்த்தங்கரர் - ‘தீர்த்த’ என்ற சொல்லிற்கு (பிறவிப் பெருங்கடலினின்னும் விடுபட்டு ஏறும்) கரை என்பது பொருள். இக்கரையினை அடைந்தவர்கள் தீர்த்தங்கரர் எனப்படுவர். அன்றியும் இக்கரையினை எய்தத் துணையாய் இருத்தலின் இப்பெயர் எய்தினர் எனலாம்.