பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


இரு அறங்கள் : பௌத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரு அறங்களே உள்ளன. இல்லறத்தார் சாவக நோன்பிகள் எனப்படுவர். இவர்கள் மும்மணிகளை வணங்கிப் பஞ்ச சீலங்களைக் கடைபிடித்து ஒழுக வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய இயலாது. துறவற வழி நின்றவர் மும்மணிகளை வணங்கிப் பத்து வைசர் சீலங்களைக் கடைபிடித்து, நான்கு வாய்மைகளை மேற்கொண்டு, அஷ்டாங்க மார்க்க வழி ஒழுகி, ஞானம், யோகம் முதலியவற்றைச் செய்வார்களானால் பிறவா நிலையாகிய பேரின்பத்தை நல்கும் நிர்வாண மோட்சத்தை எய்துதல் கூடும்.

மும்மணிகள் : புத்தர் நிறுவிய புத்தம், தர்மம், சங்கம் என்ற மூன்று நிறுவனங்கள் மும்மணிகள் எனப்படும். இவற்றைச் சரணம் அடைதல் வேண்டும். இது ‘திரிசரணம்’ என்று வழங்கப்பெறும்.


“புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”

(கச்சாமி - அடைக்கலம் புகுகின்றேன்)

இவ்வாறு மூன்று முறை நாவினால் நவிற்றி, மும்மணியை மூன்று முறை வணங்க வேண்டும். “முத்திற மணியை மும்மையின் வணங்கி” (30 : 4) என்பது மணிமேகலைத் தொடராகும்.

அஷ்டாங்க மார்க்கம் : இவை நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லமைதி என்ற எட்டுவித ஒழுக்கங்களாகும். இந்த ஒழுக்கம் ‘விகத்தி மார்க்கம்’ என்றும் ‘பழுதிலா வாழ்க்கை’ என்றும் வழங்கப்பெறும்.

இந்த மார்க்கத்தை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு முக்கியமாய் மூன்று குணங்கள் வேண்டும். அவை சீலம், சமாதி, பிரதிஜ்ஞை என்பன. சீலமாவது, விலக்கியவற்றையே செய்தல். சமாதியாவது, மனத்தை ஒருமுகப்படுத்துதல், பிரதிஜ்ஞையாவது மெய்ஞ்ஞானம். இம்மூன்றும் திரிபிடகத்தில் அடிக்கடி சொல்லப்பெறுபவை.