பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


தவிர்த்து ஆன்மா இதை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். உலகமும் உலகப்பொருள்களும் அநித்தியமானவை (என் உடலே அநித்தியமானது) என்ற அடிப்படையில் அத்திசையில் நம் ஆய்வைத் தொடராது விட்டனர். இதன் காரணமாய் அறிவியலாய் வளர்ந்த உலகப்பொருள்களைப்பற்றிய ஆய்வின் முடிவுகள் அவ்வளவாய் வளரவில்லை என்ற கருத்தையும் உங்கள் முன் வைத்தேன்.

வேத, உபநிடத ஆகம அடிப்படையிர் தோன்றி வளர்ந்த சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை ஒரு பக்கமாகவும், இவற்றைத் தவிர்த்த புறச் சமயங்களாகிய உலகாயதம் (சாருவாகம்). ஆசீவகம், சமணம், பௌத்தம் மற்றொரு பக்கமாகவும் நிற்கின்றன. முன்னவை நம்பிக்கைமீதும் பின்னவை ‘தரவு அறிவு’ ஆகிய இரண்டன்மீதும் நிற்கின்றன. கடவுள் என்ற ஒரு மாபெரும் ஆற்றல் இந்த அகிலத்தைப் படைத்து ஆட்டிவைக்கின்றது என்ற நம்பிக்கையே முன்னவற்றின் அடித்தளம். இந்த அடிப்படையைக்கொண்டே அனைத்தையும் சமயங்கள் விளக்குகின்றன. அகிலத்தில் காணும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாய் அணுகி, அவற்றின் அமைப்பு, இயக்கம், அவற்றின் இடையே காணப்பெறும் தொடர்பு ஆகியவற்றின் தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து முடிவு சொல்ல முனைகின்றது, அறிவியல். வைதிகச் சமயங்கள் (ஆன்மிகம்) உளது என்ற கருதுகோளை (Hypothesis) மையமாய்க் கொண்டது. இலது என்ற கருதுகோளை (Null-hypothesis) மையமாய்க்கொண்டு விடையைத் தேடுகின்றது, அறிவியல். இரண்டன் நோக்கம் ஒன்றாயிலும், அணுகுமுறைகளும் ஆய்வு முறைகளும் இரண்டு துருவங்கள்போல் பிரித்து நிற்கின்றன.

வைதிகச் சமயங்கள் யாவும் இறைவன் உலகினைப் படைத்தான் என்ற கொள்கையை ஒப்புக்கொள்கின்றன. புறச்சமயங்கள் இக்கருத்தை ஒப்புக்கொள்ளாது உலகத் தோற்றமும் வளர்ச்சியும் அணுக்கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகின்றன என்கின்றன. சமணர்கள் ‘சக்திகள்’ உலகத் தோற்றத்திற்குத் தேவை என்று பிறிதொரு கருத்தையும் கூடுதலாய் முன்வைக்கின்றனர். இப்போது நாம் அறிவியல் அடிப்படையில் இவற்றை நோக்குவோம்.