பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

139


பெறுகின்றது. இயற்கை வாழ்வில் தோய்ந்த தமிழரின் பொங்கல் விழா. அறிவியல் உண்மைகள் அடங்கிய ஒரு பெருவிழாவாய் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. அணுயுகத்தில் வாழும் நமக்கு அஃது அணுவின் தத்துவத்தை ஒருவாறு விளக்கி நிற்கின்றது. இந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட பாரதியின் ஞாயிறு வணக்கப் பாடலுக்குப் பொருள் கண்டு மகிழலாம்.

(9) ஆடலரசனின் தத்துவம்: ஆதவனே ஆற்றலின் மூலம் என்பதை மேலே விளக்கினேன். இதுவே இன்றைய அறிவியல் உண்மை. ஆற்றல் முழுவதும் அணுவின் உட்கருவில் தேங்கிக் கிடக்கின்றது என்பதும் இன்றைய நவீன அறிவியல் மெய்ப்பித்த உண்மை. இந்த அகிலத்தைச் சிவமாய்க் கொண்டால் ஆதவன் ஆற்றலாகின்றான். அங்ஙனமே அணுவின் உட்கருவும் சக்தியாகின்றது. ஒருவருடைய உயிர்ப்பு ஆற்றல் தடைபடாத அவருடைய இதயத்துடிப்பில் இருப்பதைப் போலவே, இந்த அகிலத்தின் ஆற்றல் ஆதவனிடத்திலும், அணுவின் ஆற்றல் அதன் உட்கருவிலும் அடங்கியுள்ளன. அண்டங்களின் தத்துவமும் அணுவின் தத்துவமும் தில்லைத் திருநடனத் தத்துவத்தில் - அம்பலவாணனின் ஆனந்தக் கூத்தில் - வைத்து விளக்கப்பெற்றுள்ளன. இத்திருவுருவத்தின் திருவாசி ‘ஓம்’ என்னும் பிரணவமாகும்; அவரது சடை, ஞானமே வடிவமானது. அதனை விரித்து நின்று ஆடுவது அவர் ஞானத்தை அள்ளி வழங்குகின்றார் என்பதைக் குறிக்கும். வீசிய கரத்தால் மாயையை உதறி, ஊன்றிய பாதத்தினால் மலத்தினை அமுக்கி. தூக்கிய திருவடியாகிய அருளை எடுத்து, ஆன்ம கோடிகளை ஆனந்தத்தில் அழுத்துகின்றார் என்பதுதான் தில்லைக் கூத்தின் உட்பொருள். ஒருகையில் உடுக்கையையும், மற்றொரு கையில் சிவத்த மழுவையும் அவர் தாங்கியிருப்பதிலிருந்து உலக அமைப்பில் ஒலி, ஒளிகளின் முக்கிய தத்துவத்தை உணரலாம். ஒலி ஒளிகளின் மூல காரணமும் துடிப்பேயாகும். இத்தத் தில்லைக் கூத்தனின் தத்துவமே ஒவ்வோர் அணுவினுள்ளும் ஆடல் அசைவுகளாய் அமைந்து கிடக்கின்றது என்பதை இன்றைய அறிவியல் உணர்த்துகின்றது.

திருமூலரும் இந்த நடராச தத்துவத்தை,

“எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமா யிருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருட் டன்விளை யாட்டதே”[1]


  1. 60. திருமத்திரம் ஒன்பதாந்தந்திரம் - திருக்கூத்துத் தரிசனம்.