பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

5


ஆங்கிலக்கணக்குப்படி பகல் 12 மணி : இரவு 12 மணி. இரண்டரை நாழிகை ஒரு மணி எனக் கணக்கிடுகின்றோம். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி. ஆவணி, புரட்டாசி. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என மாதங்கள் பன்னிரண்டாய்க் கணக்கிடுதல் தமிழ் மரபு. கலியுகாதி, சாலிவாகன. ஹிஜ்ரி, கொல்லம், பாத்ரபத, தட்சிணாயனம் என்ற முறைகளில் ஆண்டுக்கணக்கு ஏட்டு முறையில் பஞ்சாங்கத்தில் இருந்து வருகிறது. அண்மையில், திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சி நடைமுறையில் உள்ளது. ஆனால், கி.மு. கி.பி. என்னும் ஆங்கில முறைதான் புழக்கத்தில் இருந்து வருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முறை இதுவேயாகும். இதுடன் இது நிற்க.

பண்டைய அறிவியலறிஞர்கள்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர், அறிவியலறிஞர்கள் அக்காலத்தில் திகழ்ந்தனர் என்பதை,

“செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்துஎன் போரும் உளரே”[1]

(செலவு - வீதி, பரிப்பு - இயக்கம்: மண்டிலம் - வட்டம்; வளி - காற்று; வறிது நிலைஇய் - 'ஆதாரமின்றித் தானே நிற்கும்' காயம் - ஆகாயம்; இனைத்து - இத்துணை அளவு)

"ஞாயிற்றின் வீதியும், அந்த ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார் வட்டமும், காற்று இயங்கும் திக்கும், ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பெற்ற இவற்றை ஆண்டாண்டு போய் அளந்தறிந்தவர் களைப்போல் நாளும் இத்துணையளவையுடையன என்று சொல்லும் கல்வியுடையோரும் உளர்" என்ற புலவர் கூற்றில் அத்தகைய அறிஞர்கள் இருந்தமை பெறப்படுகின்றது.


  1. 2 புறம் - 30 அடி - 1-7)