உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

15


 என்பது அப்பெருமானின் திருவாக்கு. இதனை விளக்குவேன். உருண்டு திரண்டு நெருப்புக்கோளமாய் (வாயு நிலையில்) இருப்பது சூரியன். அதனிடமிருந்து சிதறி வந்து குளிர்ந்து இறுகி இருப்பது இந்த நிலவுலகம். அதே விதத்தில், சுத்த சைதன்யமாயிருப்பது சிவம். அந்தச் சிவனிடத்திலிருந்து சடசக்தி வந்துள்ளது. சடசக்தி ஐம்பெரும் பூதங்களாலாகியது. அவற்றிலிருந்து (அந்தப் பூதங்களிலிருந்து) எண்ணிறந்த அண்டங்கள் தோன்றின. அவை யாவும் சிவபெருமானுக்கு உடலாய் அமைந்துள்ளன.[1] ஆதலால், அவற்றைத் 'திரு அண்டம்' என வழங்குதல் சிறப்பு. அண்டம் என்ற சொல் உருண்டை அல்லது முட்டை வடிவில் இருப்பது எனப் பொருள்படுகின்றது. இந்தப் பேரண்டம் எண்ணிறந்த கோளங்களையுடையது. அந்தக் கோளங்களின் தன்மைகளை முற்றிலும் தெரிந்துகொள்ள இயலாது. ஆராய்ந்து நோக்கினால் அவற்றின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்படைவதற்கு உரியவைகளாயுள்ளன. ஒவ்வொரு கோளத்திலும் ஒரு தனியழகு பொலிகின்றது என்பதை விளக்கிச் சொல்லுமிடத்துக் கோடிக் கணக்கில் அவை அகண்டாகாரத்தில் விரிந்து பெருகுகின்றன.

இந்த அண்ட கோளக் காட்சி நமக்குப் புலப்படுவதை ஒர் உவமையால் விளக்குவர், வாதவூரடிகள்.

"இன்நுழை கதிரின் துன்அணுப் புரைய
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" [2].

என்பது அவர் விளக்கம். இதனை விளக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஒரு சிறிய துவாரத்தில் வீட்டுக்குள் வருகின்ற கதிரவன் ஒளியில் அணுப்போன்ற துகள்கள் - தூசிகள் - அலைந்து திரிவன நம் ஊனக் கண்ணுக்கும் தென்படுகின்றன. அது போலவே, கோளங்கள் வானத்தில் மிதந்து கொண்டுள்ளன. சிறியதாகிய அணுவுக்கும் பெரியதாகிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும். ஆராய்ந்து


  1. 17vவைணவ தத்துவத்தின் சரீர சரீரி பாவனையை இதனுடன் ஒப்பிட்டு உணரலாம்.
  2. 18 .திருவா - திருவண்டப்பகுதி, அடி 5-6