பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

23


என்று கவிஞன் கூறியவாறு, சனகனின் வேள்வியைக் காண மிதிலை நோக்கிப் பயணமாகின்றனர். மிதிலை நகர்க் காட்சிகளையெல்லாம் அநுபவித்துக்கொண்டு மிதிலை நகர் வீதியில் வரும்போது இராமனும் சீதாப்பிராட்டியும் சாளரத்தின் வழியாய் ஒருவரையொருவர் நோக்கியதை,

“அண்ணலும் நோக்கினான்;
        அவளும் நோக்கினாள்”32[1]

என்று காட்டி, அவர் காதல் கொண்டதை,

“பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.”33[2]

என்று காட்டுவான்.

“மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடல் உயிரொன்று ஆயினார்
கருங்கடல் பள்ளியில் கல்வி நீங்கிப்போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ?”34[3]

என்று விளக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துவான்.

அன்றிரவு இருவருக்கும் உறக்கம் வரவில்லை. காதல் நோய் அவர்களை வாட்டுகின்றது. இதனைக் கவிஞன் அற்புதமாய் வருணிக்கின்றான் பொழுது விடிகின்றது. கதிரவன் தோன்றுகின்றான். இதனை,

“ததையுமலர்த் தார்அண்ணல் இவ்வண்ணம்
        மயல்உழந்து தளரும் எல்வை
சிதையுமனத்து இடருடைய செங்கமலம்
        முகம்மலரச் செய்ய வெய்யோன்


  1. 32. பால. மிதிலைக் - 35
  2. 33. பால. மிதிலைக் - 37
  3. 34. பால. மிதிலைக் - 38