பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

33



மேலே காட்டிய “முன்னம் யாவரும்” என்ற கம்பன் பாடலில் கதிரவன் தேரிலுள்ள குதிரைகளின் கண்கள் கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்குறுதல் கூறப்பெற்றது. அக்கருத்தினையொட்டியே ஈண்டுத் திவ்வியகவி “பொற்கோயிலின் சுடர் எறிப்ப, வெய்யவன்தேர் மாஇடறும்” என்கின்றார். இரண்டையும் ஒப்பு நோக்கும்போது இலக்கியச் சுவை இருமடங்கு பெருகி நிற்கின்றது.

இப்பகுதியில் பன்னிரண்டு இராசிகளுள் மேடம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றவை மலையின் உயர்வுடன் அற்புதமாய்ப் பொருத்திக் காட்டப்பெறுந்திறன் எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது.

மேடம் : திருவேங்கடமலையில் பசியால் வாடிய புலியொன்று வானத்திலுள்ள ஆட்டுக்கிடா வடிவமாயுள்ள மேட இராசியைப் பார்த்துச் சீறுகின்றது.

“வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி
மேடத்தைப் பார்த்துறுக்கும் வேங்கடமே.”44[1]

(வரி உழுவை - வரிப்புலி, வாலாட்டுதல் - கோபக்குறி; மேடம் - ஆடு)

‘மேடத்தைப் பார்த்திருக்கும் வேங்கடமே’ என்ற பாடமும் உண்டு. இதற்கு, புலியானது தன் உணவிற்கும் வலிமைக்கும் தகுந்ததாகிய இடப இராசியை எதிர்நோக்கிக்கொண்டு, அவ்வகை வலிமை இல்லாத மேட இராசியைக் கண்டு வெறுத்திருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். மேட இராசி சித்திரை மாதத்திற்கு உரியது.

கடகம் : இது நான்காவது இராசி. நண்டு வடிவமானது. திருமலையில் குதித்து விளையாடும் குரங்குகள் அதன் தண்குவட்டில் பொருந்தி வரும் கடக இராசியைக் கண்டு (நண்டு வடிவத்தைக் கண்டு) வெருவியோடுகின்றன.

“தாவிவரும் வானரங்கள் தண்குவட்டிற் கற்கடகம்
மேவிவரக் கண்டோடும் வேங்கடமே.”45[2]

(குவடு - மலைச்சிகரம்; மேவி - பொருந்தி)


  1. 44. திருவேங்கடமாலை - 16
  2. 45. திருவேங்கடமாலை - 17