பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


வளைந்த வடிவமாகிய கொம்பு படுதலால் உடைந்து தேனைச் சொரிகின்றது. அந்தத் தேன் அதற்கு நேராய் வரும் குட வடிவமான கும்ப இராசியில் நிறைந்து வழிகின்றது.

“ஒண்கொம்பில் தேனிறால் ஊர்பிறைக்கோட் டால்உடைந்து
விண்கும்ப மாய்நிறைக்கும் வேங்கடமே.”51[1]

(தேன் இறால் - தேன்கூடு; ஊர் பிறை - செல்லும் பிறைச்சந்திரன்; கோடு - கொம்பு; விண்கும்பம் - கும்ப - இராசி; கும்பம் - குடம்)

‘பிறைக்கோட்டால்’ என்பதற்கு, வளைந்த வடிவமுடைய பிறையினது நுனி படுதலால் என்று உரைப்பினும் அமையும். கும்ப இராசி மாசி மாதத்திற்கு உரியது.

மீனம் : திருமலையிலுள்ள கோனேரியில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கூனல் இள வெண்குருகு ஒன்று வானத்திற் செல்லும் மீன் வடிவமான மீன இராசியின் நிழல் நீரில் தெரியக் கண்டு, அதனை உண்மையான மீன் என்று கருதிக் கொத்தி ஏமாந்து போகின்றது.

“கூனல்இள வெண்குருகு கோனேரி யில்விசும்புஊர்
மீனநிழ லைக்கொத்தும் வேங்கடமே.”52[2]

(கூனல் - வளைவான; குருகு - நீர்ப்பறவை (கொக்கு); விசும்பு - வானம்; ஊர் - செல்லுகின்ற)

கோனேரி - திருமலையின் மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள முக்கிய திவ்விய தீர்த்தம். மீன இராசி - பங்குனி மாதத்திற்கு உரியது.

இதுகாறும் இராசி மண்டலத்தில் தம் கற்பனையைச் செலுத்தின கவிஞர், விண்மீன் மண்டலத்தில் தம் கவனத்தைச் செலுத்துகின்றார்.


  1. 51. திருவேங்கடமாலை - 23
  2. 52. திருவேங்கடமாலை - 24