பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

37



மூல நட்சத்திரம் : கவிஞரின் சிந்தனை வேறொரு போக்கில் ஈண்டு நடைபெறுகின்றது.

“மண்மூலம் தாஎன்று மந்திகடு வற்குரைப்ப
விண்மூலம் கேட்டேங்கும் வேங்கடமே.”53[1]

(மண் மூலம் - கிழங்கு; மந்தி - பெண்குரங்கு; கடுவன் - ஆண் குரங்கு; விண்மூலம் - மூல நட்சத்திரம்)

பெண்குரங்கு ஆண்குரங்கிடம் ‘மூலம் தா’ (கிழங்கு கொடு) என்று வேண்டியதனால் அதனிடத்து மிக்க அன்பு கொண்ட கடுவன், தன்னைப் பிடித்து மந்தியின் கையில் கொடுத்துவிடுமே என்று மூல நட்சத்திரம் அஞ்சுகின்றது என்கின்றார், கவிஞர். இந்த வருணனையில், திருமலை, வானத்து நட்சத்திர வீதிக்கு அருகில் உள்ளது என்பதும், அம்மலைக்குரங்கு தேவகணமும் அஞ்சத்தக்க வலிமையுடையதென்பதும் தெளிவாகும். ‘மூலம்’ என்ற சொல்விளையாட்டில் ஈடுபடும் கவிஞரின் கற்பனைத்திறனை வியக்கின்றோம். அசுவினி முதல் இரேவதி முடிய நட்சத்திரங்கள் இருபத்தேழு என்பதை நாம் அறிவோம்.

அவிட்ட நட்சத்திரம் : மகளிர் பொன்னூசலிலிருந்து கொண்டு உந்தி உந்தித் தள்ளி விளையாடுகின்றனர். அந்த ஊஞ்சல் அவிட்ட நட்சத்திரத்தில் படுங்கால் அங்கு அம்மகளிர் இறங்குகின்றனர்.

“நாலவிட்ட பொன்னூசல் நன்நுதலார் உந்துதொறும்
மேலவிட்டம் தொட்டு இழியும் வேங்டமே.”54[2]

(நாலவிட்ட - தொங்கவிட்ட; நுதல் - நெற்றி; உந்துதல் - வீசித் தள்ளி ஆட்டுதல்; அவிட்டம் - அவிட்ட நட்சத்திரம்; இழியும் - இறங்கும்)

இங்கும் திருமலையும் நட்சத்திர வீதியும் ஒன்றற்கொன்று அருகிலிருப்பதாய் அறிகின்றோம். இன்னும் பல அழகிய காட்சிகள் உள்ளன; அவை படித்து நுகரத்தக்கன. அவை அறிவியலுக்குப் பொருந்தாமையால் விடப்பெற்றன.


  1. 53.திருவேங்கடமாலை 25
  2. 54.திருவேங்கடமாலை - 26