பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



2. பொறி இயல் அறிவு


பண்டைத் தமிழர்கள் பொறியியலிலும் வல்லுநர்களாய் இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. சிந்தாமணியில் விசயை இவர்ந்து சென்ற மயில் பொறியும், பெருங்கதையில் குறிப்பிடப்பெறும் யூகியால் சமைக்கப்பெற்ற இயந்திர யானையும், புறநானூறு கூறும் “வலவன் ஏவா வான ஊர்தியும்.”55[1] இராமாயணத்தில் காட்டப்பெறும் புட்பக விமானமும் பொறியியல் அறிவினால் அமைக்கப்பெற்ற சாதனங்கள் என்று கருதலாம். அமைக்கப்பெறாவிடினும் அமைக்கலாம் என்ற அறிவியல் கற்பனையாவது எழுந்திருக்க வேண்டும் என்று கருதவாவது இடம் உண்டல்லவா? அன்று பல வேறு துறைகளில் பொறியியல் அறிவு வளர்ந்திருந்ததா என்பதை எடுத்துக்காட்டற்குரிய சான்று ஒன்றும் கிடைக்கவில்லை, இதனை இலக்கியங்களுள் காணப்பெறும் ஒருசில குறிப்புகளால் அறுதியிட்டு உரைத்தற்கில்லை.

திருச்சிக்கருகேயுள்ள காவிரி நதியின் குறுக்கே கட்டப்பெற்றுள்ள கல்லணை கரிகாற்பெருவளத்தான் காலத்தில் கட்டப்பெற்றதாய்க் கூறுகின்றனர். தஞ்சைப் பெரிய கோயிலின் மாபெரும் கோபுரமும், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோபுரமும்56[2] முறையே இராசராசன் - II காலத்திலும், அவன் திருக்குமாரன் இராசேந்திரன் - II காலத்திலும் கட்டப்பெற்றன வாய் வரலாற்றால் அறிகின்றோம். இவற்றால் பொறியியலும் சிற்பக்கலையும் அற்புதமாய் வளர்ச்சி பெற்றுள்ள நிலைகளைக் காணமுடிகின்றது. அவை கட்டப்பெற்ற தொழில் நுட்ப நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

இன்று அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலுள்ள பெரிய நகரங்களில் விண்ணை முட்டும் பல்லடுக்கு மாளிகைகள் கட்டப்பெற்றுள்ளன. அவ்வளவு ஏன்? இன்று நம் நாட்டிலும் மும்பை, சென்னை, கல்கத்தா போன்ற நகரங்களில் பல்லடுக்கு மாளிகைகளைக் காண்கின்றோமல்லவா? சென்னை அண்ணா சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டடம்


  1. 55. புறம் - 27
  2. 56. இவை விமானம் இருக்கவேண்டிய இடத்தில் உள்ளன. பிற்காலத்தில் இவை கோயிலின் முதல் நுழைவாயிலில் அமைக்கப்பெற்ற இராச கோபுரமாய் மாற்றப்பெற்றுள்ளன.