பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

41


பெண்கள் இருவர் மலடியர் என்று மெய்ப்பிக்கப்பெற்றவர்கள். அஃதாவது, அவர்களின் சூற்பைகளில் முட்டையணுக்கள் உண்டாவதில்லை. லாஸ் ஏஞ்சலிஸ் என்ற மருத்துவ மனையில் அவர்களிடம் கருத்தரிப்பு ஏற்படச்செய்து வெற்றிகரமாய்க் கருவுயிர்ப்பு நிகழும்படி செய்துள்ளனர், அந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள்.

இந்த இருபெண்களின் கணவன்மார்களின் விந்தணுக்கள் வேறு இரு பெண்களின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பெற்றன; அதனால் அந்தப் பெண்கள் கருவுற்றனர். பின்னர், அந்தப் பெண்களின் கருப்பையில் வளர்ந்து வந்த கருக்கள் வெளியே எடுக்கப்பெற்று, இந்த மலட்டுப்பெண்களின் கருப்பைக்குள் பொருத்தப்பெற்றன. அந்தப் பெண்களின் வயிற்றில் கருக்கள் வளர்ந்து வந்தன. உரிய காலத்தில் அவரவர் மகப்பேறும் அடைந்தனர். மேற்குறிப்பிட்ட பலராமனின் பிறப்பும் இத்தகையதே என்பதைச் சிந்தித்து உணரலாம்.

இந்த உத்தியில் வெற்றி கண்ட அறிவியல் அறிஞர்கள், மேதைகளின் விந்தணுக்களைச் சேகரித்துச் சேம நிதியாய்ப் பாதுகாக்கலாம் என்ற வழியைச் சிந்திக்கின்றனர். தலைநகரில் நடைபெற்ற கால்வழி இயல் அறிஞர்களின் மாநாட்டில்59[1] மேதைகளின் விந்தணுக்களையும் முட்டையணுக்களையும் வருபயன் நோக்கிச் சேமித்து வைப்பதுபற்றியும் குறிப்பிட்டனர். மகப்பேறு அற்றவர்களுக்கு மகப்பேறு அளிக்க இம்முறை துணை செய்வதோடு உயர்ந்த மரபைப் பாதுகாக்கும் பெருமையும் உண்டு என்பதையும் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை “ஒழுக்க சமூக அரசியல் நெறிமுறைகள் இவற்றினின்றும்” விலக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட வழியுள்ளது என்பதையும் இவர்கள் குறிப்பிடாமல் இல்லை.


  1. 59. 1983ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் Fifteenth International Congress of Genetics என்ற மாநாடு 10 நாள்கள் நடைபெற்றது. ஐம்பது நாடுகளிலிருந்து 2500 கால்வழி இயல் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.