Justice N.K. KRISHNASWAMY REDDY (Retd.) Ph: 6211044
AD-47; Anna Nagar
Chennai-40
12-6-2000
அணிந்துரை
பேராசிரியர் பெரும்புலவர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் பல்லாண்டுகளாகத் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றியுள்ள பணி மகத்தானது. பல துறைகளிலே பல நூல்கள் எழுதிப் பல பரிசுகளும் பட்டங்களும் விருதுகளும் பெற்றிருக்கிறார்கள். இத்துணை புகழ் பெற்றும் செருக்கின்றி, ஆரவார ஆடம்பர வாழ்க்கையை அறவே ஒதுக்கி; எளிமையான வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு ஒழுக்க சீலராய் வாழ்கின்றார்கள்.
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு” (424)
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க டாக்டர். ரெட்டியார் அவர்கள் மிகவும் கடினமான மறைபொருள்களையும் எளிமையாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவதில் வல்லுநர் இவர்தம் தமிழ்ப்பணியில் அறிவியல் வாடை - ஒளி வெகுவாக இருக்கும்; ஆதிக்கம் பெற்றிருக்கும்.
பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் நிமிஷகவி திரு.கே. சுப்பைய நாயுடு அறக்கட்டளையின் ஆதரவில் “அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியம், சமயம், தத்துவம்” என்ற பொருளில் 1996-97 ஆம் ஆண்டிற்குரியனவாய், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய இரண்டு சொற்பொழிவுகளே இன்று நூல் வடிவம் பெற்றுள்ளன.
“அறிவியல் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் ஆதிமனிதன் அநுபவத்தில் படிப்படியாய்க் கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உண்டி, உடை, உறையுள், பாதுகாப்பு இவைகளை வேளாண்மை மூலமாய் நிறைவு செய்துகொண்டான் என்பதையும், அறிவியல் போக்கில் உயிரியல், மருத்துவம், கணிதம், வானியல், போக்குவரத்து முறைகள் எப்படிப் படிப்படியாய் வளர்த்தன என்பதையும் தெளிவாய் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.