பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


புராணக் குசேலர் : நம் நாட்டுப் புராணக்குசேலருக்கு இருபத்தேழு குழவிகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். அக்குழவிகள் கஞ்சிக்காப் படும் பாட்டை,

“ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
        கைநீட்டும்; உந்திமேல் வீழ்ந்து
இருமகவும் கைநீட்டும்; மும்மகவும்
        கைநீட்டும் என்செய் வாளால்;
பொருமியொரு மகவழும்; கண் பிசைந்தழும்மற்
        றொகுமகவு; புரண்டு வீழாப்
பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங்
        ஙனம்சகிப்பாள் பெரிதும் பாவம்.

அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற்
        றில்லையென அழுமாம் ஓர்சேய்;
சிந்தாத கஞ்சிவார்க் கிலையெனக்கன்
        னாயெனப்பொய் செப்பும் ஓர்சேய்
முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ
        தினியோர்சேய் முடுகி யீர்ப்ப
நந்தாமற் றச்சேயும் எதிரீர்ப்பச்
        சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய்”63[1]

வல்லூர் தேவராசப் பிள்ளை வருணித்து நமக்கு மகிழ்வூட்டுவர். இதனால் குழவிகள் யாவரும் சிறுவயதினராயிருந்தனர் என்று ஊகஞ்செய்யலாம். ஆகவே, சுசீலைக்குப் பல குழவிகளையுடைய பல குழந்தைப் பேறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கொள்வது தவறுடையதாகாது. இப்படிக் கொண்டால் தான் கவிஞருடைய கற்பனை பொருந்துவதாக அமையும். அந்தக் கற்பனைக்கும் அறிவியல் அடிப்படையில் நல்ல விளக்கமும் ஏற்பட ஏதுவாகும்.

இதனை விளக்குவதற்கு இரட்டைப் பிறவிகள், இவற்றில் ஒரு கரு இரட்டையர், இருகரு இரட்டையர், இயல்பிகந்த இரட்டையர் போன்ற அறிவியல் கருத்துகளையும்; இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகளையும் இவற்றில் முக்கோவைக் குழவிகள் (Triplets), நாற்கோவை குழவிகள் (Quadruplets), ஐந்து


  1. 63. குசேலோபாக்கியானம் - குசேலர் மேற்கடலைக் அடைந்தது செய் 70 - 71.