பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

51



3. மருத்துவ இயல்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ இயல்பற்றிய செய்திகளையும் சிகிச்சை முறைகளையும் காணலாம். திருக்குறளிலுள்ள ‘மருந்து’ என்ற அதிகாரத்தில் நோய்கள் வருவதன் காரணங்களையும், அவை வாராது தடுக்கும் முறைகளையும், அவை வந்தால் தவிர்க்கும் வழிவகைகளையும்பற்றிய செய்திகள் தரப்பெற்றுள்ளன.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”66[1]

என்பது வள்ளுவம். நோய் வருவதன் காரணத்தையும், நோய் இன்னதென்பதையும் ஐயமறத் துணிந்து மருந்து செய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய முறைகளை மேற்கொண்டு அந்நோயைப் போக்க வேண்டும் என்பது பண்டைய மருத்துவ முறையாகும். இன்றைய மருத்துவ முறையும் இதனையொட்டியே உள்ளது. அங்ஙனமே, நோயற்றவனின் வயது முதலியவற்றையும், அவனுடைய வேதனை, வலி முதலியவற்றையும், காலவேறுபாடுகள் முதலியவற்றையும் நோக்கிச் சிகிச்சை செய்தல் வேண்டும். இதனை,

“உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.”67[2]

என்று குறிப்பிடுவர், வள்ளுவப்பெருந்தகை. இங்ஙனம் பல கருத்துகள் இவண் கூறப்பெறுகின்றன.

கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத்தூள் முதலியவை புகுந்துகொண்டால் காந்தத்தைக்கொண்டு இக்காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். பண்டையோரும் இம்முறையை அறிந்திருந்தனர் என்பதைக் கம்பன் காட்டுகின்றான். இராவண வதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகிலிருந்து நில உலகிற்கு வந்து இராமனுடன் உரையாடும்பொழுது தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றான். இதனைக் கவிஞன்,


  1. 66. குறள் - 948
  2. 67. குறள் - 946