பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



“அன்று கேகயன் மகள்கொண்ட
        வரம்எனும் அயில்வேல்
இன்று காறும்என் இதயத்தில்
        இடைநின்ற தன்னைக்
கொன்று நீங்கலது இப்பொழுது
        அகன்றதுஉன் குலப்பூண்
மன்றல் ஆகமாம் காந்தமா
        மணியின்று வாங்க”68[1]

(அயில்வேல் - கூரிய வேல்; மன்றல் - மணம்; ஆகம் - மார்பு)

என்று குறிப்பிடுவான். அன்று கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் என்னும் கூரிய வேல், இன்று இராமனைத் தழுவியதனால் அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று கூறுவதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பைக் கண்டு மகிழலாம்.

கருவுயிர்த்த மங்கையர், குழந்தையை நீராட்டி மருந்தூட்டி வளர்க்கும் திறம் சீவக சிந்தாமணியில் காட்டப்பெற்றுள்ளது.

“காடி யாட்டித் தராய்ச்சாறும்
        கன்னல் மணியும் நறுநெய்யும்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்
        கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினிய பகுவாயும்
        கண்ணும் பெருக உகிர்உறுத்தித்
தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த்(து)
        அண்ணா உறிஞ்சி மூக்குயர்த்தார்.”69[2]

(காடி - கஞ்சி; தராய்ச் சாறு - பிரமிச்சாறு; கன்னல்மணி - கருப்புக்கட்டி; வாயுறீஇ - வாயில் உறுத்தி; பெருக - பெரிதாகும்படி; உகிர் உறுத்தி - நகத்தால் அகலமாம்படி செய்து; அண்ணா - உண்ணாக்கு)

என்ற பாடலில், குழந்தை பிறந்தவுடன் அதற்குச் செய்யும் செயல்கள் இதில் குறிப்பிடப்பெறுகின்றன. செய்திகளை எண்ணி எண்ணி மகிழலாம். நவீன மருத்துவர்களும் அறியாத எவ்வளவு செய்திகள் இதில் காட்டப்பெறுகின்றன!


  1. 68. கம்பரா, யுத்த, மீட்சி - 118
  2. 69. சீவக சிந் - முக்தி இலம்பகம் - 2703 (105)