பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


அவற்றின் அழகையும் மர்மத்தையும், கவர்ச்சியையும், அவை நமக்குப் பொருள் விளக்கம் தரும் முறையினையும் எடுத்துரைப்பதாகும். சுருங்கக் கூறின், கவிதை உண்மை என்பது கற்பனை மூலமும் உணர்ச்சிகளின் மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைப்பதாகும். வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துரைப்பதே கவிதையின் நோக்கமாகும்.

வாழ்க்கை உண்மைகள் : வாழ்க்கை என்பது நிலை பேறுடையது; மனித இனம் இம்மன்பதையில் உள்ள வரை தொடர்ந்து நடைபெறுவது. வாழ்க்கையில் இன்பங்களும் உள்ளன, துன்பங்களும் உள்ளன ; நிறைந்திருக்கின்றன. அல்லல்களும் தொல்லைகளும் காணப்பெறுகின்றன. ஆன்மாவைக் கொல்லும் பாவம் என்ற புற்றுநோய் அங்கு உண்டு; ஆழம் காண முடியாத காதல் அங்குக் காணப்படும். வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை, புகழ் மனக்கச்செய்யும் துணிச்சல் போன்ற பண்புகள் அதில் இடம் பெறும். இத்தனையும் பல படலங்கள்போல் கவிந்துள்ள வாழ்க்கை நம்மைக் கவர்கின்றது; ஆனால், என்றும் அது நமக்கு மனநிறைவினைத் தருவதில்லை. இத்தகைய வாழ்க்கையைப் பற்றித்தான் மாபெருங் கவிஞர்கள் பலபடக் கூறியுள்ளனர். இவர்கள் வாழ்க்கையின் கூறுகள் யாவற்றையும் ஆழ்ந்து காண வல்லவர்கள்; வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளை நாம் உணரும்வண்ணம் விளக்க வல்ல ஆற்றல் பெற்றவர்கள். தமிழ் இலக்கியத்தில் கவிதை வடிவில் பொதிந்து வைத்துள்ள இத்தகைய உண்மைகள் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் கவிதைகளைப் படிக்கும் நமக்கு எடுத்து உரைத்துக்கொண்டே உள்ளன. கதிரியக்கப் பொருள்களிலிருந்து கதிர்கள் வெளிவருவதைப்போல், இலக்கியங் களிலிருந்து பல வாழ்க்கை உண்மைகள் வந்துகொண்டே உள்ளன. இவை மன்பதை என்றும் மறவாமல் நினைவில் இருத்த வேண்டிய உண்மைகள். துன்பக்கடல் போன்ற இவ்வுலகில் 'மம்மர் அறுக்கும் மருந்தாய் .73 இருந்துகொண்டு இன்பம் பயக்கவல்ல இலக்கியங்களை நாம் கவனிக்காமல் உதாசீனம் செய்தால், நமக்கு உலகில் ஆறுதல் அளிக்கக்கூடிய பொருள்களே இல்லை என்றாகிவிடும்.


73. நாலடியார் - 132