பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

57



7. வானொலியும் தொலைக்காட்சியும்

இறுதியாக, பாரதிதாசன் பாடல்களுள் ஒன்றைக் காட்டி என் இன்றைய உரையைத் தலைக்கட்ட நினைக்கின்றேன்.

வானொலி நிலையத்திலுள்ள நம் உள்ளங்கை அளவுகள்ள ஒலிவாங்கியின் (mike) வாய் மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்போல் உலகனைத்தையும் உண்டு உமிழும் வாயாய் , அமைந்துள்ளது. அங்ஙனமே தொலைக்காட்சி நிலையத்திலுள்ள நமது கண்ணைவிட மிகவும் சிறியதாய் உள்ள ஒளி உலகின் சாரக்கலம் என்னும் மாயக்கண் இந்த அகிலம் முழுவதையும் ஊடுருவிப் பார்க்க வல்லதாய் அமைந்துள்ளது.

வானவெளியில் கோடானுகோடி சூரியர்களுள் நமது சூரியனும் ஒன்று. அத்தனைச் சூரியர்களுள்ளும் நமது சூரியன் தரத்திலும் அளவிலும் மிகச்சிறியது. இந்தச் சிறிய சூரியனைச் சுற்றியோடும் கோள்களுள் மிகச்சிறியது, நாம் வாழும் பூமண்டலம் - இந்த மண்ணுலகம். அதன் பரப்பில் மிகச்சிறிய இனத்தைச் சார்ந்த மானிடர்கள் நாம்; பிணி மூப்பு சாக்காடு உடையவர்கள். இத்தகைய மக்களாகிய நாம் நிறுவிய சிறியதொரு வீட்டினுள் அமைந்த சின்னஞ்சிறிய கருவியொன்று உலகனைத்தையும் செவிசாய்த்துக் கேட்கின்றது. மற்றொன்றோ உலகம் முழுவதையும் ஏறிட்டுப் பார்க்கின்றது. உலகனைத்திலுமுள்ள கலைகளை ஒன்றாய்த் திரட்டி, எப்பகுதிகளிலும் சுரக்கும் அறிவினை ஒன்றாய்ச் சேர்த்து ஞானப்பாலாய் ஊட்டும் தாயர்களாய் அமைகின்றன, இக்கருவிகள். தேசிய ஒருமைப் பாட்டிற்காய்க் கோடானுகோடி பணத்தைச் செலவிட்டுத் தம்பட்டமடித்து அதனை நாம் நினைக்கின்றவாறு பெறமுடி யாமல் தத்தளித்துக்கொண்டுள்ளோம். ஆனால், இவை இரண்டுமோ உலக ஒருமைப்பாட்டினையே விளைவித்து வருகின்றன! உலக மக்கள் அனைவரையும் ஒருதாய் வயிற்று மக்கள் போல் ஒன்றாய்ப் பிணைக்க முயன்றுகொண்டு வருகின்றன.

****