பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்




வானொலியும் தொலைக்காட்சியும் மின்னணுவியல் சகோதரிகள். அவர்களுள் ஒருவர், செவிமடுத்தியார்; மற்றொருவர், கண்ணம்மையார். மானிடச் சகோதரிகளைப் போலவே இவர்களிடமும் சில பொதுவான பண்புக் கூறுகள் அமைந்துள்ளன. இந்த இரு சகோதரிகளின் பிறப்பைப்பற்றிப் பாவேந்தர் கனவு கண்டுள்ளார். கவிஞர் கற்பனையில் பிறந்த இந்த இருசகோதரிகளும் பாவேந்தரின் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற காவியப்போக்கில் படைக்கப்பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியத்தில் இலைமறைவாய்க் காட்சி தருகின்றனர்: மூலிகைகள் என்ற திருநாமம் பெறுகின்றனர்.

குப்பனும் வள்ளியும் அந்த மலையில் சந்திக்கின்றனர். அந்த மலையில் இரு மூலிகைகள் இருப்பதாய்க் கற்பனை செய்கின்றார், கவிஞர். அவற்றின் அருமைப்பாட்டைக் குப்பன்,

“ஒன்றைத்தின் றால்இவ் உலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்குமற் றொன்றைவா யில்போட்டால்
மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம்.”74[1]

என்று வள்ளிக்குக் கூறுகின்றான். கவிதையின் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நமக்கு வானொலியும் தொலைக்காட்சியும் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியையும் மற்றொரு மூலிகை தொலைக்காட்சியையும் குறிப்பிடுவதாய் நாம் கொள்ளலாம். இங்ஙனம் கவிஞரிடம் தோன்றிய கற்பனைதான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிமூலம் புதுப்புனைவுகளாய் வடிவெடுத்தது என்று கருதுவதில் தவறொன்றும் இல்லை.

குப்பன் வள்ளியைத் துக்கிக்கொண்டு ‘விட்டெறிந்த கல்லைப் போல்’ மலையின்மீதேறிப் பாய்கின்றான். மூலிகை இருத்த இடத்தில் அவளை இறக்குகின்றான். இளவஞ்சி மூலிகைகளைக் கிள்ளிக்கொள்ளுகின்றாள். இருவரும் சிறிது வழி நடந்து, ஒரு மரத்து நிழலில் ஆர ஆமர நிற்கின்றனர். இருவரும் ஒரு மூலிகையைத் தின்றதும், வையத்து மாந்தர்கள் எந்த


  1. 74. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - அடி 43-47 (பாரதிதாசன் கவிதைகள் - முதற்பகுதி)