பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

65


கல்லாடனாரும் குறித்தனர். மணிமேகலை போதிசத்துவராகிய அறவண அடிகளிடம் அணுகி,

“அடிகள் மெய்ப்பொருள் அருளுக” (20 அடி 47)

என்று வேண்டுவதாய்க் குறிப்பிட்டிருத்தலைக் காணலாம். பெளத்த தருக்கமும் தத்துவமும் அறவண அடிகளால் அறச்செல்வர்க்குப் போதிக்கப்பெறுவதால் ‘மெய்ப்பொருள்’ என்பது, உண்மை காண்பதற்குக் கருவியாய்ப் பயன்படும் அளவை இலக்கணத்தையும், அளவைகளால் துருவிக் கண்ட உண்மைப் பொருளையும் உணர்த்துகின்றது எனக் கொள்ளலாம்.

இனி, இந்தப் பொழிவின் தொடக்கமாய் ஆதிமுதல் இன்று வரை அறிவியல் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சுருக்கமாய்க் கூறுவது பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன்.


1. அறிவியல் தோற்றமும் வளர்ச்சியும்

நினைப்பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னதாகவே - இலக்கியச்சுவையுடன் சொன்னால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்பாகவே - மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்திலேயே, வியப்பு அச்சம் காரணமாய் கண்காணா ஏதோ ஓர் இயற்கைச் சக்தியின்மீது வழிபாடு நடைபெற்று வந்துள்ளதாய் அறிகின்றோம். உயிரினங்கள் இவ்வுலகில் தோன்றிப் படிப்படியாய் வளர்ந்த பாங்கின் இறுதிக் கட்டமாய்த் தோன்றியது மனித இனம் என்பது தொல்லாசிரியர்களின் முடிந்த முடிபாகும். தொடக்க கால மனிதனின் வாழ்க்கை, விலங்கு வாழ்க்கைபோல் அமைந்திருந்தது. படிப்படியாய்க் கூட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இந்த வாழ்க்கையின் அநுபவத்தால், வளர்ச்சியின் முதிர்வால், சமுதாயக் கோட்பாடுகளை அமைத்துக்கொண்டு வாழத் தொடங்கினான். இந்த உலகப் பொருள்களுக்கும் உயிர்ப்பொருள்களுக்கும் தானே தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன் வசதிக்காகப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான்.