பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

67


மிருந்து கிடைக்கும் பொருள்களைத் தனது அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டான். இயற்கைப் பொருள்கள் இல்லையேல் தனது வாழ்வும் இல்லை என்ற உண்மையை நன்கு உணர்ந்தான். ஒப்புரவுடன் வாழ்ந்த சமுதாய உணர்வால் உணவுப் பொருள்களை அவர்களது அன்றாடத் தேவைக்கு அதிகமாகவே இயற்கையிலிருந்து சேகரித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடிந்தது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குச் சிந்திக்கவும் அறிவின் அடிப்படையில் செயற்படவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திய முறைகளைச் சில தலைப்புகளாகப் பகுத்துக்கொண்டு விளக்க நினைக்கின்றேன். இங்ஙனம் பகுப்பு முறைகளாய் அவை வளர்ந்தன என்று நினைப்பது தவறு. அவை ஒட்டுமொத்தமாகவே வளர்ந்தன என்பதுதான் உண்மை. வசதிக்காக அவை தனித்தனியாகப் பிரித்துப் பேசப்பெறுகின்றன. தவிர, இவை யாவும் உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டிலும் வளர்ச்சியுற்றன என்று கருதுதலும் தவறு. பல பகுதிகளில் வளர்ந்தன என்பதுதான் உண்மை. அவற்றைத் தொகுத்து உங்கள் முன் வைக்கின்றேன். (i) வேளாண்மை : உயிர் வாழ உணவு முக்கியமானது. இயற்கையில் கிடைத்த உணவு போக, சில பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்து நிலத்தை உழவு செய்து பயிர்களை வளர்த்து உணவுப்பொருள்களைப் பெருக்கித் தன் அன்றாட வாழ்க்கையைச் சீர்செய்துகொண்டான். ஓட்ஸ், மரவள்ளி என்ற கிழங்குவகை, பீன்ஸ் என்ற துவரை வகை இவற்றில் முதன் முதலாக அவன் கவனம் சென்றதாய் அறியக் கிடக்கின்றது. பின்னர் நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் உற்பத்தியில் கவனம் சென்றிருத்தல் வேண்டும். இரும்பு கண்டறிந்த பிறகு கொளு முதலியவற்றைக் கொண்டு கலப்பை(ஏர்)யைச் சீர் செய்யக் கற்றுக் கொண்டதையும் களைக்கொட்டு, மண்வெட்டி முதலிய கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதையும் அறிய முடிகின்றது. இம்முயற்சி டிராக்டர் கண்டறியும்வரை கொண்டு செலுத்தியுள்ளது. தொடக்கத்தில் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளைத் தன் குடும்ப நண்பனாக்கிக்கொண்டு அவற்றை வேளாண்மைக்குப் பயன்படுத்திக்கொண்டான்.