பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


 (2) உறையுள் : மரநிழல்களிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் நாளடைவில், கோரை, தென்னங்கீற்று ஆகியவற்றால் குடிசை போட்டு வாழக் கற்றுக்கொண்டான். மண்ணாலும் கற்களாலும் சுவர் எழுப்பிக் கட்டடங்களைக் கட்டும் முறை, சூரிய வெப்பத்தாலும் நெருப்பாலும் சுடுமண் (செங்கல்) தயாரிக்கும் முறை வளர்ந்தது. சுண்ணாம்பு மணலைச் சேர்த்துக் காரை கண்டறியப்பெற்று கட்டடத்திற்குப் பயன்படுத்தப் பெற்றது. நாளடைவில் சீமைக்காரை (Cement) கண்டறியப் பெற்றது. கிடைப்படங்கள் வரைந்து, திட்டமிட்டு, கட்டடங்கள் எழுப்பும் முறை வளர்ந்து இன்று வானளாவும் பல்லடுக்கு மாளிகைகள் கட்டுவதுவரையான நாகரிகம் வளர்ந்துவிட்டது. கட்டடக்கலை ஒரு தனிப்பட்ட கலையாகவும் வளர்ந்துவிட்டது. பண்டைக் காலம்முதல் பறவைகள் ஒரே விதமாய்க் கூடுகள் கட்டிக்கொண்டிருக்க விலங்குகள் ஒன்றும் செய்யாமலிருக்க மனிதனின் கட்டடக் கலை வளர்ச்சி நம்மை வியக்க வைக்கின்றது.

(3) உடை : தழையாடையை அணிந்து வந்த மனிதன் தட்பவெப்ப நிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்தான். சணல், கற்றாழை, சணப்பை, பருத்தி முதலியவற்றை விளைவித்து, நார் அல்லது நூல் உண்டாக்கி, ஆடை நெய்யக் கற்றுக்கொண்டான். இதற்கு முன்னர், கோரை, ஈந்து முதலியவற்றுள் பாய் முடையக் கற்றுக்கொண்டான். பனை ஓலையைக்கொண்டு தடுக்கு முதலியவற்றை அமைக்கும் முறையை அறிந்தான். இப்போது நான் இச்செய்திகளைச் சொல்லச் சில மணித்துளிகள்தாம் ஆயின. ஆயினும், இச்செயல்கள் படிப்படியாய் நிகழ, அதற்கு முன்னர் செய்து பார்க்க எத்தனையோ ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

(4) பாதுகாப்பு : கொடிய மிருகங்களிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேட்டையாடுவதற்குப் பயன்படும்பொருட்டும் சில ஆயுதங்களைச் செய்யவும் அவன் கற்றுக்கொண்டான்; கற்களால் ஆன ஆயுதங்கள், வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டான்.

(5) அணிகள் : சிறு கற்களையும், எலும்பு, மரம் முதலிய பொருள்களைக்கொண்டு செய்த அணிகள், கைவிளக்குகள்,