பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

71



(9) வானியல் : சூரியன், சந்திரன் முதலிய கோள்களின் இயக்க அடிப்படையில் காலத்தைக் கணக்கிடும் முறை தோன்றியது. காலத்தை ஆண்டு, மாதம், வாரம், நாள் என்ற அடிப்படையில் பஞ்சாங்கம் {Almunac) எழுதும் முறை முகிழ்ந்தது. பல நட்சத்திரங்களையும் கணிக்கும் முறை அரும்பியது. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றைக் கணிக்கும் முறையையும் (இதுவே பஞ்சாங்கம் எனப்படுவது), கிரகணங்களைக் குறிக்கும் முறையையும் அறியத் தொடங்கினர். இக்காலத்தில்தான் சிலர் மூடப்பழக்கங்களாய்க் கருதும் இராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியவற்றையும் கணக்கிட்டனர். அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம் முதலியவற்றையும் குறித்தனர். இவையெல்லாம் சேர்ந்து சோதிடச் சாத்திரமாய் வளர்ந்தது. சோதிடக்கலையிலிருந்து தான் வானியல் (Astronomy) தனி இயலாய் வளர்ந்தோங்கியது. தாலமி (Ptolemy), கலிலியோ, காப்பர்னிகஸ் போன்றார். இதன் வளர்ச்சியில் பங்கு பெற்றனர். இனி, தனியாக சேய்போல் வளர் நிலையிலும் தாயாகிய சோதிடக்கலை இன்றளவும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் தனித்தன்மையுடன் திகழ்கின்றது.

(10) அறிவியல் : கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் அணுக் கொள்கைபற்றிய பேச்சு எழுந்தது. ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டே போனால், பிரிக்க முடியாது நிற்கும் பொருளே அடிப்படை, அதற்கு அணு என்று பெயரிட்டனர். அந்த அணுவால் ஆனதுவே இந்த உலகம்; இந்த அகிலமும் அப்படியே. பூக்களைச் சேர்த்தால் பூமாலையாதல் போல, அணுக்களைச் சேர்த்தால் அண்டமாகிறது. பலபல வடிவமான பூக்கள் பலபல வடிவமான மாலையாவது போல, பலபல விதமாய் அணுக்களும் பலபல வடிவமான உலகப் பொருள்களாகின்றன என்று வேறு சிலர் கூறி வந்தனர். இதுதான் அணுவாதம், ஆரம்பவாதம். பழங்காலத்ததாகிய சமண மதம் பேசியதும் இந்த அணுக்கொள்கையைத்தான். மணிமேகலை என்ற நூலில்,

“எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்புஇல் அறிவன் இறைநூற் பொருள்கள் ஐந்து
உரம்தரு உயிரொடு, ஒருநூல் வகைஅணு
அவ்வணு உற்றும், கண்டும் உணர்ந்திட
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்;