பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

75



அலெக்சாண்டர் நம் நாட்டின்மீது படையெடுத்து வந்து, வெற்றியுடன் தம் நாடு திரும்பியபோது, இந்தியத் தாவர விலங்கினங்களைக் கொண்டுசென்று தம் ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் உயிரியல் ஆய்விற்கு வழங்கியதாய் வரலாறு உண்டு. மேற்காசிய கிரேக்க நாடுகளில் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் தோன்றின. தத்துவச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அரங்குகளும் அமைக்கப்பெற்று அவற்றின் மூலம் உலகப் பொருள்கள் ஆராயப்பெற்றன. கிறித்துநாதர் மரித்த பிறகு ஒவ்வொரு கிறித்து தேவாலயமும் ஒரு பள்ளியை நடத்தும் பணியில் ஈடுபட்டது. இதனால் கல்வி பரவத் தொடங்கியது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகமும் பிரான்சு நாட்டில் பாரிஸ் பல்கலைக் கழகமும் நிறுவப்பெற்றன. காலப்போக்கில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பல்கலைக் கழகங்கள் அமைந்து அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாய்த் திகழ்ந்தன.

நாளடைவில் கணிதம் மேலும் வளர்ந்தது. வானியல்பற்றிய கருத்துகள் தொகுத்த தாலமி (Ptolemy) பற்றிய சிந்தனைகளும் அணுக்கொள்கையும் வளர்ச்சி பெற்றன. காலக்கணக்கீடு செய்யும் முறையிலும் நாட்குறிப்புக்கான தேதிகளை அறுதியிடுவதிலும் முன்னேற்றங்கள் காணப்பெற்றன. எரிமலைகள் இறைவனின் சீற்றத்தால் வெடிப்பவை என்ற நம்பிக்கையிலிருந்து விடுபட்டு முறையான விளக்கம் தரப்பெற்றது. வேதியியல், இரசவாதம் (Alchemy) என்ற மாயக்கிரியை என்ற நம்பிக்கையிலிருந்து மீண்டு சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக்கூடிய வேதியியல் துறையாய் மாறியது. வானியல், மருத்துவம் மேலும் வளர்ச்சி பெற்றன.

கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவியல் வளர்ச்சியில் ஒரு புதிய போக்கு நேரிட்டது. கிரேக்க, அரேபிய அறிவியல் நூல்கள் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பெற்றன. ஒரு காலத்தில் கிறித்தவ சமயம் அறிவியல் போக்கை எதிர்த்துப் போர்க்கொடி காட்டிக்கொண்டிருந்தது. அறிவியல் வரலாற்றில் கண்ட சான்று ஒன்றால் இதனை அறியலாம். ஒரு சமயம், குதிரைக்குப் பல் எத்தனை என்ற வினா எழுந்ததாம். ஒரு சிந்தனையாளன் ஒரு குதிரையைப் பிடித்து எண்ணிக் கணக்கிடலாமே என்றானாம். அப்படிச் செய்யக்கூடாது, நூலகத்திலுள்ள அறிஞர் நூல்களிலிருந்து தேடிப் பெற வேண்டும் என்று சமய குருமார்கள் கூறி, அந்தச் சிந்தனையாளனுக்குத் தண்டனையும் விதித்தனராம். காலப்போக்கில் சமயப் பெரியார்கள் அறிவியலின் தாக்கத்திற்குச் சமயம் ஏற்ற முறையில் அமைய வேண்டும் என்ற கருத்திற்கு இசைந்து அப்போக்கினை ஏற்றுக்கொள்ளலாயினர்.