பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



14-15ஆம் நூற்றாண்டுகளில் உயிரியல் வளர்ச்சியில் பல புதிய அணுகு முறைகள் தோன்றலாயின. மருத்துவம் வியத்தகு முறையில் வளர்ந்தது. மூலிகைகள் மருந்துப் பொருள்களாயின. கஞ்சா, அபினி, கந்தகம். பாதரசம், அமிலங்கள் போன்ற வேதியியற் பொருள்கள் மருத்துவ முறையில் இடம் பெற்றன.

சீனாவில் அறிவியல் அறிவு மேலை நாடுகளுக்கும் மேலானதாய் ஓங்கி நின்றது. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மற்றெல்லா நாடுகளை விடச் சீன அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் காகிதம் செய்யும் முறையைக் கண்டறிந்த நாடு இதுவே. காந்தம்பற்றிய விளக்கத்தை அறிந்திருந்தனர். வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்களே. நான் தொடக்க நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில் (1921-29) சீன வெடி புகழ் பெற்றிருந்தது. இன்று அந்தப் புகழைச் சிவகாசி வெடி ஏற்றுக் கொண்டுவிட்டது. சீன நாகரிகம் இயந்திர இயக்கம்பற்றிய பல கோட்பாடுகளை அறிந்திருந்தது. சீனர்களின் வானியல் அறிவு வியக்கத்தக்க முறையில் அமைந்திருந்தது. மனிதன் அறிவியலைக் கொண்டு இயற்கையை ஆட்சி புரியலாம் என்ற கருத்தைக் கொண்டவர்கள் அல்லராதலால், அவர்களது கருத்துகள் மலடாகவே நின்றுவிட்டன. சோதனை செய்து பார்க்கும் அறிவியல் அணுகு முறையையும் தொழில் மயமாக்கும் முயற்சியையும் மேற்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தில் பின்தங்கியவர்களாயினர்.

(13) அறிவியல் மறுமலர்ச்சி : 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 200 ஆண்டுகாலம் (கி.பி.1450-1650) அறிவியல் மறுமலர்ச்சிக் காலமாய்த் திகழ்ந்தது. சோதனை மூலம் அறிவியல் உண்மைகளை அறுதியிடும் அணுகுமுறை பொதுவாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. கிறித்தவ சமயத்தில் புராட்டஸ்டண்டு பிரிவு தொடங்கப்பெற்றது. ஐரோப்பாவில் மேலும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பெற்று அவை யாவும் அறிவியல் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோல்களாய் அமைந்தன.

கலிலியோ பூமியைச் சுற்றிக் கதிரவன் வலம் வருவதான கருத்தினைக் கொண்டவர். பின்னர் வந்த காபர்நிக்கஸ் கதிரவனை மையமாய்க் கொண்டுதான் பூமி முதலிய கோள்கள் வலம் வருவதாய் நூல் ஒன்றையும் வெளியிட்டார் (கி.பி. 1543). வசாலியஸ் எழுதிய உடற்கூற்று நூலும் வெளிவந்தது. இவையிரண்டும் அறிவியல் மறுமலர்ச்சிக்குத் திருப்பு முனைகளாய் அமைந்தன. ஐரோப்பா முழுவதும் பல ‘அறிவியல் கழகங்கள்’ நிறுவப்பெற்றுப் பல அறிவியல் கருத்துகள் ஆராயப்பெற்றன.