பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

77




இதற்கு அடுத்த கட்டத்தில் (கி.பி. 1660 - 1735) அறிவியல் வளர்ச்சியில் பல சாதனைகள் படைக்கப்பெற்றன. நியூட்டனின் பொருள்களைப்பற்றிய விதிகள் ஏற்கப்பெற்று அரிஸ்டாட்டிலின் கருத்துகள் ஒதுக்கப்பெற்றன.

அறிவியல் அணுகுமுறைகளில் மேலும் வளம் சேர்ந்தது. இயற்பியலின் இயக்க விதிகள் (Laws of Motion), ஒளித்தன்மை, மின்ஆற்றல் முதலிய பல துறைகளில் முன்னேற்றம் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. நீராவி எந்திரங்கள் புனையப்பெற்று நடைமுறைக்கு வந்ததும் இக்காலத்தில்தான்.

19ஆம் நூற்றாண்டில் மின்னாற்றல், காந்தம் முதலியவை அறியப்பெற்று இயற்பியல்துறை முன்னேற்றம் கண்டது. உயிர்களின் கூர்தல் அறக்கொள்கை (Theory of Evolution) நிறுவப்பெற்றது. வேதியியல் துறையில் அங்கக வேதியியல் (Organic Chemistry) தனித்துறையாய்ப் பிரிந்து வளர்ந்தது. இதனால் உயிரினங்களின் வேதியியல் அமைப்பு தெளிவாயிற்று. உயிரியலில் உடல்கள் யாவும் செல்களால் (Cells) ஆனவை என்பதும், அத்தகைய செல்களைப்பற்றிய விளக்கங்களும் தெளிவாயின. வெப்ப ஆற்றல் பற்றிய உண்மைகள் தெளிவடைந்தன.

(14) அறிவியலும் வாழ்க்கையும் : 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அறிவியல், வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தொழில் புரட்சி ஏற்பட்டுத் தொழிற்சாலைகள் பெருகின. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் வளர்ந்தன. மின்னணுவியலில் (Electronics) பல முன்னேற்றங்கள் தொடர்ந்தன. தொலைபேசியால் பரந்துபட்ட நாடுகள் நெருங்கி வந்தன. விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பெற்றன. ‘சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்’6[1] என்ற பாரதியின் கூற்று அம்புலியில் மனிதன் இறங்கியதால் நனவாகிவிட்டது. மருத்துவத்தில் பல வியத்தகு முன்னேற்றங்கள், லேசர் போன்ற புதிய ஆற்றல் வாய்ந்த ஒளி அலைகளின் பயன் நடைமுறைக்கு வந்தன. இன்று கணிப்பொறி அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது.

2. சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, தீர விசாரிப்பது என்ற போக்கில் அறிவியல் தொடங்கி வளர்ந்து; நம்பிக்கையில் தோன்றி


  1. 6. பா.க : தே.கீ : 5. பாரததேசம் - 11