பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


வளர்ந்தது சமயம் என்பதை நாம் அறிவோம். உலகமெங்கும் வாழும் நம் மூதாதையர், மனிதகுலம் - உலகம், ஆன்மா, கடவுள் என்ற முப்பொருள்களைப்பற்றி ஆய்ந்தனர் என்றும், உலகம் பற்றிய ஆய்வை மேலைநாட்டார் அதிகமாய்ச் செய்து அறிவியலாய் உருவம் பெற்றது என்றும், நம் நாட்டார் ஆன்மா, இறைவன் என்ற இருபொருள்களை ஆய்ந்து சமயமாய் வளர்ந்தது என்றும் கருதலாம். ஆன்மா, இறைவன்பற்றிய எண்ணத் தெளிவுகளே சமயமாகவும் ஆன்மிகமாகவும் வளர்வதற்குக் காரணமாயின.

ஆன்மா, கடவுள் போன்ற கருத்துகள் மக்களின் வழிபாட்டு முறைகளோடு பிணைக்கப்பட்டு இருந்தன. அதனால் ஆன்மிகக் கருத்துகள் சமயங்களாய் மலர்ந்தன. ஆன்மிகத் தத்துவங்கள் என்பன ஆன்மா, இறைவன் என்ற இரு கருத்துகளையும் அளவை முறையில் (Logic) அமைத்த விளக்கங்கள் ஆகும். சமயங்கள் என்பன ஆன்மா, இறைவன் என்ற இரண்டையும் இணைத்து வழிபாட்டுச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும். (அஃதாவது தோத்திரங்களையும்) அமைத்துக்கொண்ட வாழ்க்கை முறைகளாகும். இவற்றை உற்று நோக்குங்கால், ஆன்மிக விளக்கங்கள் முற்றிலும் சமய விளக்கங்களில் அமைந்துவிட்டன என்று சொல்ல முடியாத நிலை உண்டாயிற்று. எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளியலாம்.

(1) பல்வேறு சமயங்கள் : நம் நாட்டுச் சமயங்கள் நடைமுறையில் பல கடவுள்களை (Polythesim) வழிபாட்டு முறையில் ஏற்றுக்கொண்டுள்ளன. சிவன், திருமால், முருகன், கலைமகள், திருமகள், விநாயகர் என்பவை இதற்கு எடுத்துக்காட்டுகள். ‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத கடவுளுக்கு ஆயிரம் திருநாமங்கள்’ ஏற்பட்டுள்ளன. ஆனால், நம் நாட்டு ஆன்மிகத் தத்துவங்கள் ஒன்றே கடவுள் (Monothesim) என்ற தெளிவு கொண்டவை. ‘ஒன்றே குலம்: ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் திருவாக்கு இதற்குச் சான்று. ஆன்மிகத் தத்துவங்கள் பல கடவுளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையினின்று வளர்ந்து, ஒரு கடவுள் என்ற நிலைக்கு மாறி இறுதியில் முதற்பொருள் ஒன்றே என்ற கருத்திற்கு வந்தவை.

“பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
        பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே;
        தத்து வமஸி; தத்வமஸி,7[1] நீயே அஃதாம்;


  1. 7. தத்வமஸி - வேதத்திலுள்ள மகாவாக்கியங்களுள் மிகச்சிறப்புடையது இது. இது மூன்று சொற்களையுடையது. துவம் - நீ, தத்- அதுவாக, அணி - இருக்கின்றாய் என்பது பொருள். சீவான்மாவாகிய நீ பரமான்மாவாகிய அதற்கு வேறுபட்டவன் அல்லன் என்பது இதன் பொருள். இக்கோட்பாட்டை எல்லாச் சாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் இயம்புகின்றன.